அதிக எதிர்பார்ப்புகளுடன் களமிறங்கிய கேப்டன் படம்..முதல் கிரியேச்சர் படம் சாதித்ததா? சறுக்கியதா?
சென்னை : ஆர்யா, ஐஸ்வர்யா லெக்ஷமி உள்ளிட்டவர்கள் நடிப்பில் இன்றைய தினம் திரையரங்குகளில் கேப்டன் படம் ரிலீசாகியுள்ளது.
டெடி என்ற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த ஆர்யா -சக்தி சௌந்தர்ராஜன் கூட்டணியில் மீண்டும் உருவாகியுள்ள படம் கேப்டன்.
சக்தி சௌந்தரராஜனின் வித்தியாசமான இயக்கம், ஆர்யாவின் நடிப்பு மற்றும் தமிழில் முதல் கிகரியேச்சர் படம் என அதிகமான ரசிகர்களின் எதிர்பார்ப்புடன் இன்றைய தினம் படம் வெளியாகியுள்ளது.

ஆர்யா -சக்தி சௌந்தரராஜன் கூட்டணி
டெடி என்ற சிறப்பான படத்தை இணைந்து கொடுத்திருந்தனர் நடிகர் ஆர்யா மற்றும் சக்தி சௌந்தரராஜன் கூட்டணி. இந்தப் படத்தில் டெடிபேரை சிறப்பாக பயன்படுத்தி வித்தியாசமான கதைக்களத்துடன் ரசிகர்களுக்கு சிறப்பான படத்தை கொடுத்திருந்தார் சக்தி சௌந்தர்ராஜன். வழக்கம்போல ஆர்யாவின் சிறப்பான நடிப்பும் படத்திற்கு கைக்கொடுத்தது.

தமிழின் முதல் கிரியேச்சர் படம்
இந்தப் படம் தமிழின் முதல் கிரியேச்சர் படமாக வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்தக் கூட்டணி தற்போது இரண்டாவது முறையா கேப்டன் படத்தில் இணைந்தது. இந்தப் படத்தில் சக்தி சௌந்தரராஜன் வித்தியாசமான இயக்கம், ஆர்யாவின் நடிப்பு மற்றும் முதல் கிரியேச்சர் படம் என பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ளது.

பிரிடேட்டர் படத்தின் தழுவல்
ஜான் மெக்ரியர்னன் இயக்கத்தில் கடந்த 1987ம் ஆண்டு அர்னால்ட் நடிப்பில் வெளியான பிரிடேட்டர் என்ற ஹாலிவுட் படத்தை தழுவிதான் கேப்டன் படம் எடுக்கப்பட்டுள்ளது. சிறப்பான கதைக்களத்துடன் தான் சக்தி சௌந்தர்ராஜன் களமிறங்கியுள்ளார். ஆனால் அவரது படத்தில் எப்போதும் காணப்படும் சுவாரஸ்யம் இந்தப் படத்தில் மிஸ்ஸிங்.

சொதப்பலான திரைக்கதை
சொதப்பலான திரைக்கதையால் ரசிகர்களை கவரத் தவறியுள்ளார் சக்தி சௌந்தரராஜன். கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பிரிடேட்டர் ரசிகர்களுக்கு கொடுத்த த்ரில் அனுபவத்தைக்கூட தற்போதைய கேப்டன் படம் கொடுக்த் தவறியுள்ளது. இதை உங்களிடம் எதிர்பார்க்கவில்லை இயக்குநர் சார் என்று ரசிகர்கள் திரையரங்குகளில் கதறுகின்றனர்.

சிறப்பான ஆர்யா நடிப்பு
ஆனால் படத்தின் கூடுதல் பலமாக ஆர்யாவின் நடிப்பு காணப்படுகிறது. ஹரீஷ் உத்தமன் உள்ளிட்ட தன்னுடைய டீமுடன் செக்டர் 42 மிஷனில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், விநோதமான கிரியேச்சர் அவரையும் அவரது டீமையும் தாக்கும் நிலையில், அதன் பின்புலத்தை ஆராயும் அவரது வெற்றிச்செல்வன் கேரக்டர் சிறப்பாக அமைந்துள்ளது.

சிம்ரன் சிறப்பு
படத்தில் காவ்யா ஷெட்டி, சிம்ரன் உள்ளிட்டவர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்கை சிறப்பாகவே செய்துள்ளனர். ஆனால் நாயகியாக வரும் ஐஸ்வர்யா லெக்ஷமிக்கு நடிப்பதற்கு ஸ்கோப் குறைவாகவே உள்ளது. அதனால் அவரது கேரக்டர்கள் ரசிகர்களை கவரவில்லை. சிறிது நேரமே அவர் படத்தில் வருகிறார்.

ஆர்யாவின் கம்பீரம்
ராணுவ வீரராக வரும் ஆர்யா, அதற்கேற்ப கட்டுக்கோப்பான உடலால் மற்றும் தன்னுடைய கேரக்டரால் ரசிகர்களை கவர்கிறார். தன்னுடைய கம்பீரமான தோற்றம் மற்றும் சிறப்பான நடிப்பால் அவர் சிறப்பாக காணப்படுகிறார். படத்தில் அடுத்ததாக விஎஃப்எக்ஸ். இதுபோன்ற கிரியேச்சர் படங்களில் மிகவும் சிறப்பாக இருந்திருக்க வேண்டிய VFX இந்த படத்தில் சொதப்பியுள்ளது.

சொதப்பிய VFX காட்சிகள்
கார்ட்டூன் படத்தை பார்ப்பதை போன்ற உணர்வையே இந்த முயற்சிகள் ரசிகர்களுக்கு அளித்துள்ளன. ஆனால் யுவாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. இமானின் இசையில் பாடல்களும் கவனத்தை ஈர்க்கவில்லை. பின்னணி இசையிலும் அதிகமான கவனத்தை இமான் அளிக்க தவறியுள்ளார்.

ரசிகர்களை கவரத்தவறிய இயக்குநர்
மொத்தத்தில் ஒரு டெடிபேரை கொண்டு சிறப்பான திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளால் ரசிகர்களை கவர்ந்த சக்தி சௌந்தர்ராஜன், கிரியேச்சர் படத்தை கொடுத்த நிலையிலும் ரசிகர்களை கவர தவறியுள்ளார். முதல் கிரியேச்சர் படம் என்ற பெருமை மட்டுமே படத்திற்கு உள்ளது. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் சார்.


Click it and Unblock the Notifications











