Captain: 'நீ பொட்டு வெச்ச தங்ககுடம்’.. மறைந்தாலும் குறையாத அன்பு.. We Miss You கேப்டன்!
சென்னை: கேப்டன்.. கேப்டன் விஜயகாந்த்.. காலத்தின் பக்கங்களில் ஏதோ ஒரு ஒற்றை வரியில் இடம் பெற்ற சொல் இல்லை. கேப்டன் ஒரு சகாப்தம்.. கேப்டன் ஒரு வரலாற்றை உருவாக்கிய தியாகத் தலைவன். கேப்டன் விஜயகாந்த் அரசியலுக்கு வந்த பின், அவருடன் அரசியலில் பலருக்கும் முரண்பாடு இருக்கலாம். ஆனால் யாருக்கும், அவரது குணத்தின் மீது முரண் இருக்காது. அள்ளி அள்ளிக் கொடுத்து சிவந்த கைகளுக்குச் சொந்தக்காரர் கேப்டன். அவர் இறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. அவர் குறித்து சில சுவாரஸ்யமான விஷயங்களை இந்தத் தொகுப்பில் காணலாம்.
கருப்பு உருவம், வெள்ளந்தியான மனசுக்குச் சொந்தகாரரான கேப்டன், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி உடல்நலக் கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ்நாட்டையே ஒரு துக்கம் நடந்த வீட்டினைப்போல் மாற்றியது. கேப்டனுக்கு அஞ்சலி செலுத்த கண்ணீர் சிந்திக் கொண்டு, தமிழ் நாட்டின் மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம், சென்னையை நோக்கி புறப்பட்டார்கள்.

லட்சோப லட்ச மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்த, பல லட்சக்கணக்கான மக்களால் அவருக்கு இறுதி மரியாதை செலுத்த முடியாமல் மக்கள் வெள்ளத்தில் மாட்டித் தவித்தார்கள். கேப்டன் உடல் வைக்கப்பட்டிருந்த இடமான, தீவுத் திடலில் இருந்து, கோயம்பேடு அலுவலகத்திற்கு உடலை வெகு விரைவாக எடுத்து வந்து விடலாம் என காவல்துறை திட்டமிட்டது. ஆனால் மக்கள் வெள்ளம் வழி நெடுகிலும் இருந்ததால், கேப்டன் உடல் வைக்கப்பட்டிருந்த வாகனம் அங்குலம் அங்குலமாகத்தான் நகர்ந்தது.
இறுதி ஊர்வலம்: வழி நெடுகிலும் மக்கள் மலர்களைத் தூவி கேப்டனை வழி அனுப்பி வைத்தனர். பசியால் யாரும் வாடக்கூடாது என, தன்னை நம்பி வந்தோருக்கு எல்லாம் வயிறார மனதார சாப்பாடு போட்ட ஒரே தலைவன். தனது கட்சி மாநாடு நடந்தபோதுகூட, தான் பேசி முடித்த பின்னர், "உங்க எல்லாருக்கும் சாப்பாடு ஏற்பாடு பண்ணியிருக்கேன், போகுற வழியில எதாவது இடத்துல உட்காந்து சாப்புட்டுட்டு போகனும்" என அன்பால் அடித்தவர் கேப்டன்.
ஒரு ஆண்டு: கேப்டன் மறைந்து ஒரு ஆண்டு ஆகின்றது. யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பதைப்போல அவர் இறந்த பின்னரும் அவருக்கான மரியாதையும் அவர் மீது மக்கள் வைத்துள்ள அன்பும் துளியும் குறையவில்லை. மாறாக, அன்பு அபரிமிதமாக அதிகரித்துள்ளது. கேப்டன் மறைவுக்குப் பின்னர், நடிகர் சங்கத்தின் சார்பில், நடிகர் சங்க கட்டிடத்தின் ஒரு பகுதிக்கு கேப்டன் பெயர் சூட்டப்படும் என நடிகர் சங்கம் அறிவித்தது.
இணையவாசிகள்: அதேபோல் விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தின் ஆரம்பத்திலேயே கேப்டன் விஜயகாந்த் வருவதைப்போல் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காட்சி வைக்கப்பட்டது. இது குறித்த தகவல்கள் வெளியானதும் இணையத்தில் கேப்டனின் ஏ.ஐ. புகைப்படங்களை உருவாக்கி இணையத்தில் அதிகமாக பகிர்ந்தனர் இணையவாசிகள். அதேபோல் லப்பர் பந்து படத்தில், அட்டக்கத்தி தினேஷ் ஏற்று நடித்த கெத்து கதாபாத்திரம், தீவிரமான விஜயகாந்த் ரசிகர் என்பது போல் காட்சிகள் வடிவமைக்கப்பட்டது.
ரசிகர்கள்: கெத்து கதாபாத்திரம் கிரிக்கெட் விளையாட களமிறங்கும்போது எல்லாம், பொன்மனச் செல்வன் படத்தில் இடம் பெற்ற நீ பொட்டு வெச்ச தங்ககுடம் ஊருக்கு நீ மகுடம் பாடல் ஒலித்து விஜயகாந்த் ரசிகர்களை குஷிப்படுத்தியது. படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால், இணையத்திலும் இந்தப் பாடல் ட்ரெண்ட் ஆனது. வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோனி களமிறங்கும்போது இந்தப் பாடல் ஒலிபரப்பப்படும் எனும் அளவிற்கு பாடலை ரசிகர்கள் கொண்டாடிவிட்டார்கள். லப்பர் பந்து படத்தைப் பார்க்க தியேட்டருக்கு படையெடுத்த விஜயகாந்த் ரசிகர்கள் ஏராளம்.
Miss You கேப்டன்: அதேபோல் சில வாரங்களுக்கு முன்னர் ரிலீஸ் ஆன படைத்தலைவன் படத்தின் ட்ரைலரிலும் விஜய்காந்த் வருவதைப்போல் காட்சி வைக்கப்பட்டது. அதேபோல், கேப்டன் குடும்பத்தினரும், கேப்டன் உங்கள் சொத்து, அவரை நீங்கள் சினிமாவில் பயன்படுத்த எங்களிடம் அனுமதி கேட்கவேண்டியதில்லை எனவும் அறிவித்தனர். கேப்டன் மறைந்து ஒரு வருடம் ஆகிவிட்டாலும் அவர் இன்றைக்கும் பலருக்கும் உதவிக்கொண்டுதான் உள்ளார். We Miss You கேப்டன்!


Click it and Unblock the Notifications











