ஆசை ஆசையாய் கட்டிய வீடு.. விஜயகாந்தின் நிறைவேறாத ஆசை.. கலங்கும் தொண்டர்கள்!
சென்னை: ஆசை ஆசையாய் கட்டிய வீட்டில் கால்கூட எடுத்து வைக்காமலே விஜயகாந்த் உயிரிழந்த செய்தி அவரது தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்த விஜயகாந்த் பத்தாம் வகுப்பு வரை படித்தார். அதன்பின் தனது தந்தையின் அரிசி ஆலையினை கவனித்து வந்த இவருக்கு சினிமா மீது ஈர்ப்பு இருந்ததால் வாய்ப்பு தேடி சென்னை வந்தார். 1978ல் இயக்குநர் காஜாவின் இயக்கத்தில் வெளிவந்த இனிக்கும் இளமை என்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாம்த்திரத்தில் நடித்தார்.

அதன்பின் 1980ம் ஆண்டு வெளிவந்த தூரத்து இடிமுழக்கம் படத்தில் முக்கிய ரோலில் நடித்து ஒரு நிலையான இடத்தை பிடித்தார். பின் 1981ம் ஆண்டு விஜய்யின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் இவர் நாயகனாக நடித்து வெளிவந்த சட்டம் ஒரு இருட்டறை என்ற திரைப்படம் ஒரு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. விஜயகாந்தின் திரைப்பயணத்தில் ஒரு மிகப்பெரிய திருப்பத்தையும் தந்தது.
பல வெற்றிப்படங்கள்: அந்த திரைப்படத்தை தொடர்ந்து வைதேகி காத்திருந்தாள்,அம்மன் கோயில் கிழக்காலே, தழுவாத கைகள்,ஊமை விழிகள் அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகரானார். இவரது படங்களில் தேசப்பற்று வசனங்கள் மிகவும் அழுத்தமாக இருக்கும். ஊழல், திருட்டு என சட்ட விரோத செயல்களுக்கு எதிராக இவரின் குரல் திரைப்படங்களிலும், சமூகத்திலும் தொடர்ச்சியாக ஒலிக்கும்.
மறக்க முடியாத ரமணா: விஜயகாந்த் நடிக்கும் படங்கள் பெரும்பாலும் ஊழலுக்கு எதிரானதாகவும், தேசப்பற்று மிக்க படங்களாக இருக்கும். பெரும்பாலும், இரட்டை வேடம், போலீஸ் மற்றும் ராணுவ வீரர் போன்ற வேடங்களில் நடித்துள்ளார். ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான ரமணா படத்தில் ஊழல்வாதிகளுக்கு பாடம் புகட்டும் வகையில் நடித்திருப்பார். இத்திரைப்படம் விஜயகாந்த் திரைப்பயணத்தில் ஓர் முக்கியமான படமாகும்.
தீவுதிடலில் அஞ்சலி: தமிழ் சினிமாவில் 35ஆண்டுக்கும் மேலாக தவிர்க்க முடியாத நடிகராக இருந்த விஜய்காந்தின் சகாப்தம் முடிந்துவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர். நேற்று காலை உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலத்தில் வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் போதிய இடவசதி அங்கு இல்லாததால் இன்று காலை தீவுதிடலில் அவரது உடல் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நிறைவேறாத ஆசை: பலரும் விஜயகாந்தை நினைவுகூர்ந்து கதறி அழுதுவரும் நிலையில், அவரின் நிறைவேறாமல் போன ஆசைகுறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதாவது விஜயகாந்த் அவர்கள், பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கம் அட்கோ நகர் பகுதியில், 2013ஆம் ஆண்டு வீடு கட்ட ஆசைப்பட்டாராம். இதற்காக அப்பகுதியில் சுமார் 20 ஆயிரம் சதுர அடி இடத்தை விலைக்கு வாங்கி பூஜையும் போட்டு, வீடு கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், இடையே கொஞ்சம் பொருளாதாரச் சிக்கல்களால் வீடு கட்டும் பணி சில ஆண்டுகளாக கிடப்பில்கூட போடப்பட்டுள்ளது.
கலங்கும் ரசிகர்கள்: இதையடுத்து, அண்மையில் வீடு கட்டு பணி தொடங்கப்பட்டு இக்கட்டுமானப் பணி முடிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு கிரஹப்பிரவேச ஹோமம் வளர்க்கப்பட்டதாகவும், அதில் உடல்நிலைக் குறைபாடு காரணமாக விஜயகாந்த் பங்கேற்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது. 10 ஆண்டுகளாக தான் ஆசையாக கட்டிய வீட்டில் குடும்பத்துடன் வாழவேண்டும் என நினைத்த விஜயகாந்த்தின் ஆசை கடைசி வரை நடக்காமலே போய்விட்டது. இந்த தகவல் தற்போது வெளியாகி தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











