மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜய்காந்த்.. இயக்குநர் கொடுத்த சர்ப்ரைஸ்!
சென்னை: விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகி உள்ள மழை பிடிக்காத மனிதன் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பேசிய இயக்குர் விஜய் மில்டன், இந்த படத்தில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் இடம்பெற்றுள்ளார், இப்போதைக்கு இதைத்தான் நான் சொல்ல முடியும் மற்றவற்றை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்றார். இந்த செய்தி தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
"காத்திருந்த கண்கள்" என்கின்ற திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் தான் விஜய் மில்டன். இவர் சேரனின் ஆட்டோகிராப், காதல், காதலில் விழுந்தேன் போன்ற பல ஹிட் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். இதில் கிடைத்த சினிமா அனுபவத்தை வைத்து, 2006ம் ஆண்டு வெளியான அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் களமிறங்கினார்.

மழை பிடிக்காத மனிதன்: இதைத்தொடர்ந்த கோலி சோடா படத்தை இயக்கினார். பதின்பருவ குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் வெற்றிப்பெற்றத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டு கோலி சோடா படத்தை இயக்கினார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது இவர் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன் படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில், விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்யராஜ், சரத்குமார், முரளி சர்மா, தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு அச்சு ராஜாமணி - விஜய் ஆண்டனி இணைந்து இசையமைத்துள்ளனர்.
கேப்டன் வருவாரு: இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர், மழை பிடிக்காத மனிதன் என்கிற தலைப்பை கேட்டதுமே, உங்களுக்குள் ஒரு கேள்வி வருகிறது இல்லையா. அதுதான் இந்த படத்தின் கேள்வி இந்தப் படம் முழுவதும் அந்த ஒரு கேள்விதான் கதையை நகர்த்திக் கொண்டு போகும். கிளைமேக்ஸ் காட்சியில் அதற்கான விடை நமக்கு கிடைக்கும். மேலும், ' கேப்டன் இந்த படத்தில் இருக்காரு இப்போதைக்கு அது மட்டும் தான் நான் சொல்ல முடியும். அவரு பிளசிங்கா இருக்காரா, இல்ல என்னவா இருக்காரு அப்படி என்ற விஷயம் எல்லாம் இப்போதைக்கு சொல்ல முடியாது. ஆனால், கேப்டன் இந்த படத்தில் இருக்கார் என்று கூறியுள்ளார். இயக்குநர் சொன்ன இந்த விஷயம் அவரின் தீவிர நலன்விரும்பிகள் வைரலாக்கி வருகின்றனர்.
டிரைலர்: இதையடுத்து வெளியான டிரைலரில் இளையராஜாவின் உறவுகள் தொடர்கதை பாடலுடன் தொடங்குகிறது. யாரைப் பத்தி, யாருக்கு தான் முழுசா தெரியும். ஒருத்தர பத்தி ஒருத்தர் தெரிஞ்சுக்கிற முயற்சியில தானே இந்த உலகமே உருண்டுகிட்டு இருக்கு என சரண்யா பொன்வண்ணன் பேசும் வசனம் கவனம் பெறுகிறது. இப்படத்தில் விஜய் ஆண்டனி, தன்னைச் சுற்றியிருப்பவர்களின் பிரச்சினையில் அவர் தலையிடுவதும், அதனால் ஏற்படும் பாதிப்புகளாகவும் படம் இருக்கும் என தெரிகிறது. இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











