வடிவேலு அப்படி செய்வாருனு எதிர்பார்க்கல! அப்பா உடன் இருந்தவர்கள் துரோகம் செய்தார்கள்! விஜயகாந்த் மகன் வருத்தம்
சென்னை: மறைந்த கேப்டன் விஜயகாந்த்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள படம் படைத் தலைவன். அன்பு இயக்கியுள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். படம் வரும் 23ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று அதாவது மே 15ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் சண்முக பாண்டியன் அண்மையில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவர் பேசும்போது, " எங்களின் அம்மா இல்லை என்றால் நாங்கள் யாருமே இல்லை. அம்மாதான் எங்கள் குடும்பத்திற்கே மிகப்பெரிய தூண். வெளியே இருப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம். எனது மாமா குறித்து தவறாக சொல்லலாம், அம்மா குறித்து தவறாக சொல்லலாம். அண்ணா குறித்து தவறாக சொல்லலாம். ஆனால் குடும்பத்திற்குள் என்ன நடக்கிறது என்பது எங்களுக்கு தெரியும், கட்சிக்காரர்களுக்கு தெரியும்.

அப்பா குறித்து மக்களுக்கு போகப்போக புரிய ஆரம்பித்தது. இதனால் அப்போது அப்படி நினைத்தீர்கள், இப்போது ஏன் வருகிறீர்கள் என்று கேட்க முடியாது. நாங்கள் பணத்தை வாங்கி வைத்துக் கொண்டோம் என்று கூறுகிறார்கள். அப்படியானால் நான் ஏன் படம் பண்ணாமல் இருக்க வேண்டும்? அண்ணா ஏன் வேறு தொழில் தொடங்காமல் இருக்க வேண்டும்? அம்மாவும் அண்ணாவும் ஏன் அரசியலில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அப்பா சொல்லிக் கொடுத்ததை நாங்கள் அப்படியே பின் தொடர்ந்து வருகிறோம்.
யார் குடிக்கவில்லை: அப்பா குறித்த அவதூறான கருத்துக்களை திட்டமிட்டுத்தான் பரப்பினார்கள். யார் தான் குடிக்கவில்லை? ஆனால் குடிப்பதை அப்பா வெகு நாட்களுக்கு முன்னர் நிறுத்திவிட்டார். அப்பாவின் கண்கள் எப்போதும் சிவப்பாக தான் இருக்கும். குடித்துவிட்டு வந்து, நிற்கிறார் என்று கூறினார்கள். இவையெல்லாம் திட்டமிட்டு செய்கிறார்கள் என்று எங்களுக்கு தெரியும். அப்பா குறித்து பலரும் கிண்டல் செய்யும் போது, அது அவரை பாதித்ததா என்று தெரியவில்லை. ஆனால் அதை அவர் எங்களிடத்தில் வெளிக்காட்டியதில்லை. தொலைக்காட்சியில் வந்தால் கூட சேனலை மாற்றி விடுவார் அல்லது அவர்கள் இப்படித்தான் பேசுவார்கள், நான் மக்களுக்கு நல்லது செய்ய வந்தேன் நல்லது செய்வேன் என்று கூறுவார்.

வடிவேலு பிரச்னை: வடிவேலு சாருக்கு அப்பா, சினிமாவில் உதவி செய்துள்ளார் என்பது உண்மை. அதே நேரத்தில் வடிவேலு சாரும் மிகப்பெரிய திறமைசாலி. அதனால்தான் அவர் இந்த உயரத்தில் உள்ளார். ஆனால் அவர் அப்பாவைப் பற்றி பேசியது தேவையில்லாதது. அப்பாவுக்கு அந்த காலகட்டத்தில் வருத்தம் இருந்திருக்கலாம். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் அப்பா அதனை கண்டுகொள்ளவில்லை. அப்பா எப்போதாவது கவலையாக இருந்தால் கூட, வடிவேலு சாரின் காமெடி போட்டுத்தான் பார்த்துக் கொண்டு இருப்பார். எனது படத்திலேயே அவரை நடிக்க வைக்கலாமா என்று ஒரு யோசனை இருந்தது.
விட்டுவிடச் சொன்ன கேப்டன்: அப்பாவும் வடிவேலு சார் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார். ஆனால் கதாபாத்திர வடிவமைப்பில் இளமையான நபர் தேவைப்பட்டதால், வடிவேலு சாரை நாங்கள் அணுகவில்லை. வடிவேலு சார் அப்பாவை விமர்சித்த பின்னர், அப்பா சொன்னது, விட்டுடுங்க, ஏதோ தெரியாம பேசிட்டாரு என்று கூறினார். அப்பா அப்படி சொன்ன பின்னர் விட்டுவிட வேண்டும். அதை நோண்டிக் கொண்டு இருக்க கூடாது" என்று பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











