Vijayakanth: கோழி குஞ்சுகளை அடை காத்தது போல அனைவரையும் அரவணைத்தவர் விஜயகாந்த்.. நாசர் புகழ்ச்சி!
சென்னை: நடிகர் விஜய்காந்தின் நினைவேந்தல் கூட்டம் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் நடிகர்கள், நடிகைகள் என அனைவரும் கலந்துக் கொண்டு விஜய்காந்தின் உருவப்படத்திற்கு மலர்த்தூவியும் மெழுகுவர்த்தி ஏற்றியும் தங்களது அஞ்சலியை செலுத்தினர். இதில் நடிகர்கள் கமல்ஹாசன், விக்ரம், சரத்குமார், சச்சு, வடிவுக்கரசி, அம்பிகா உள்ளிட்டவர்கள் திரளாக கலந்துக் கொண்டு அஞ்சலியை செலுத்தியும் விஜயகாந்த் குறித்த தங்களது நினைவுகளை பகிர்ந்தும் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் விஜயகாந்தின் பல விஷயங்களை பெருமையுடன் பேசினார். மேலும் தான் அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்றும் விஜயகாந்த் குறித்த நினைவுகளை பகிர்ந்துக் கொள்ள நூற்றுக்கணக்கானோர் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். விஜயகாந்தின் இரு சிறப்பான முகங்கள் குறித்து அவர் வெளிப்படுத்தினார். நடிகராகவும் தென்னிந்திய நடிகர் சங்க தலைவராகவும் இரு முகங்களை சிறப்பான வகையில் கேப்டன் விஜயகாந்த் வெளிப்படுத்தி முதலிடத்தில் இருந்ததாகவும் நாசர் புகழ்ந்தார்.

நடிகர் விஜயகாந்த்: நடிகர் விஜயகாந்த், புரட்சிக் கலைஞர், கேப்டன் என தன்னுடைய தொண்டர்கள், ரசிகர்களால் புகழப்பட்டவர். 30 ஆண்டுகளை தொடர்ந்து நடிப்பு, அரசியல் என அடுத்தடுத்த தளங்களில் பயணித்த விஜயகாந்த், கடந்த மாதம் 28ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக தன்னுடைய 71வது வயதில் காலமானார். அவருக்கு தென்னிந்திய அளவில் ஏராளமான நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட திரைத்துறையினர் நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில் அடுத்த நாள் அவருக்கு சிறப்பான வகையில் இறுதிக்கூட்டம் நடத்தப்பட்டு அவரது தேமுதிக அலுவலகத்திலேயே விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
நினைவேந்தல் கூட்டம்: இந்நிலையில் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாத நடிகர்கள், ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் தொடர்ந்து அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடத்தப்படும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று மாலை அவருக்கு சென்னை காமராஜர் அரங்கத்தில் நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தக் கூட்டத்திற்கு நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் என திரளாக கலந்துக் கொண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர்கள் விக்ரம், சத்யராஜ், சரத்குமார், மன்சூர் அலிகான், சதீஷ், கருணாகரன் உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
நடிகர், நடிகைகள் அஞ்சலி: இதேபோல நடிகைகள் சச்சு, வடிவுக்கரசி, அம்பிகா, காயத்ரி ரகுராம் உள்ளிட்டவர்களும் விஜயகாந்தின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்று அவரது உருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் மெழுகுவர்த்தி ஏற்றியும் வணங்கினர். இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், அவர் எப்போதும் அணியும் வெள்ளை நிற உடையை போலவே உன்னதமான வாழ்க்கையை வாழ்ந்து சென்றுள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளார். விஜயகாந்த் குறித்து உணர்வுகளை பகிர்ந்துக் கொள்ள பலநூறு பேர் காத்திருப்பதாக தெரிவித்த அவர், தான் அதிக நேரம் எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

விஜயகாந்தின் இருவேறு முகங்கள்: விஜய்காந்திடம் இருவேறு முகங்களை தான் கண்டதாகவும் நாசர் புகழ்ச்சி தெரிவித்தார். விஜயகாந்த் மிகவும் வெற்றி பெற்ற உச்சக்கட்ட நட்சத்திரமாக விளங்கியதை சுட்டிக் காட்டிய நாசர், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக வெகு நாட்கள் கழித்து பெரிய நட்சத்திரங்கள், சிறிய நட்சத்திரங்கள் என அத்தனை பேரையும் கோழி தன்னுடைய குஞ்சுகளை அடை காத்தது போல அனைவரையும் நிகழ்ச்சிகளுக்காக அவர் ஒருங்கிணைத்ததையும் குறிப்பிட்டு நாசர் பேசினார். இந்த விஷயத்திற்காக தான் காலம் முழுவதும் நன்றி கூறுவேன் என்றும் நாசர் தெரிவித்தார். தற்போது தென்னிந்திய நடிகர் சங்கம் சிறப்பாக நடப்பதற்கு விஜயகாந்த்தான் காரணம் என்றும் நாசர் குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications











