vijayakanth funeral: கேப்டன் எழுந்து வாங்க.. வழிநெடுகிலும் கேட்கும் அழுகுரல்!
சென்னை: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் செல்ல தொடங்கி உள்ளது. வழி நெடுகிலும் குவிந்து இருக்கும் மக்கள் கேப்டன் எழுந்து வாங்க என்று கதறி அழுதனர்.
கொரோனாவால் உயிரிழந்த விஜயகாந்தின் உடல் நேற்று கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. கடைசியாக அவரின் முகத்தை ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என்பதற்காக அவரது ரசிகர்கள் தொண்டர்கள் அலுவலகத்தின் வாசலில் காத்துக்கொண்டு இருந்தனர். திரை பிரபலங்களும், அரசியல் கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்துவதற்கு வந்தால் மேலும் கூட்ட நெரிசல் அதிகரித்தது.

ஒரு கட்டத்திற்கு மேல் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதாலும் இட நெருக்கடியாலும், சென்னை தீவு திடலில் விஜயகாந்தின் உடல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. நேற்று கோயம்பேட்டில் விஜய் அஞ்சலி செலுத்திய நிலையில், இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு தீவுத்திடலில் அஞ்சலி செலுத்தினர். அவரைத் தொடர்ந்து உலக நாயகன் கமல் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இறுதி ஊர்வலம்: விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் மதியம் ஒரு மணிக்கு தொடங்கும் என தலைமைக்கழகம் அறிக்கையில் தெரிவித்திருந்த நிலையில், அலை கடல் போல திரண்டு இருந்த ரசிகர்கள் மட்டும் தொண்டர்கள் கடைசியாக அவரது முகத்தை பார்த்துவிட வேண்டும் என காத்திருந்ததால் இறுதி ஊர்வலம் தொடங்குவது தாமதமானது. இதையடுத்து, தமிழக ஆளுநர் கே என் ரவி, விஜயகாந்த்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட வண்டியில் விஜயகாந்தின் உடல் ஏற்றப்பட்டு ஊர்வலம் தொடங்கியது.
கேப்டன் விஜயகாந்த் எழுந்து வாங்க: அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ், விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் மற்றும் தேமுதிக கட்சி நிர்வாகிகள் இருந்தனர். சாலையின் இருபுறமும் கூடி இருந்த மக்கள் கேப்டன் எழுந்து வாங்க.. எழுந்து வாங்க என்றும்... கேப்டன் கேப்டன் என்று நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறி அழுதபடி நின்றனர்.
இறுதிச்சடங்கு: விஜயகாந்தின் உடல் தேமுதிக கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இதற்காக ஏழு அடி உயரத்திற்கு 6அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டுள்ளது. முழு அரசு மரியாதையுடன் நடைபெற உள்ள இந்த இறுதி சடங்கில் 200 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இறுதிச்சடங்கில் தமிழ அரசின் சார்பில் தா மோ அன்பரசன், மா சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடல் சந்தனப் பேழைக்கு மாற்றப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications











