வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்தியதாக புகார்.. நடிகை பானுப்ரியா மீது ஆந்திர போலீஸ் வழக்குப் பதிவு!
வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நடிகை பானுப்ரியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை : வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்தியதாக, அச்சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் நடிகை பானுப்ரியா மீது ஆந்திர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
80 மற்றும் 90களில் தமிழின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்தவர் நடிகை பானுப்ரியா. திருமணத்திற்குப் பிறகு நடிப்பதிலிருந்து விலகிய அவர், பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். தற்போது சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் சத்யராஜ் மனைவியாக நடித்திருந்தார்.

இந்நிலையில், பானுப்ரியா வீட்டில் பணியாற்றும் தனது மகளை கொடுமைப்படுத்துவதாக அச்சிறுமியின் தாயார், ஆந்திர மாநிலம் சாமர்லகோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில் தனது மகளை அவர்கள் கொடுமை செய்வதாகவும், சரிவர சம்பளம் தரவில்லை. இதைக் கேட்டால் திருட்டுப் பழி சுமத்துவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், 'அந்த சிறுமி எங்கள் வீட்டில் ஓராண்டுக்கு மேலாக வேலை செய்கிறார். ஐபேட், பணம், கேமரா, நகைகள் உள்ளிட்டவற்றை திருடி தனது தாயிடம் கொடுத்துள்ளார். திருடியது குறித்து கேட்டதற்கு உண்மையை ஒப்புக் கொண்டார். திருடிய பொருட்களை திருப்பிக் கொடுத்துவிட்டார்கள்", என பானுப்ரியா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் ஆந்திர போலீசார், நடிகை பானுப்ரியா மற்றும் அவரது சகோதரர் மீது சிறார் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து நடிகை பானுப்ரியா கைது செய்யப்படலாம் என்ற நிலைமை உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











