'ஆதிபுருஷ்' ராவணன் பற்றி சர்ச்சை கருத்து.. பிரபல நடிகர், இயக்குனருக்கு எதிராக திடீர் வழக்கு!
மும்பை: ராவணன் பற்றி கருத்துத் தெரிவித்த பிரபல நடிகர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நடிகர் பிரபாஸ் நடிக்கும் படம், 'ஆதிபுருஷ்'. இந்திப் பட இயக்குனர் ஓம்ராவத் இயக்குகிறார்.
ராமாயணக் காவியத்தின் ஒரு பகுதி கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகிறது.

ராமர் பிரபாஸ்
அதன்படி பிரபாஸ் ராமராக நடிக்கிறார். இந்தி, தெலுங்கில் உருவாக இருக்கும் இந்தப் படத்தை தமிழ், மலையாளம், கன்னட மொழிகளிலும் வெளியிடுகின்றனர். 3டி-யில் உருவாகிறது. படம் பற்றி பிரபாஸ், இந்தப் படத்தின் ஒவ்வொரு கேரக்டரும் சவாலானது. இந்த காவிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆவலுடன் இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

சைஃப் அலிகான்
இதில் அதாவது ராவணனாக இந்தி நடிகர் சைஃப் அலிகான் நடிக்கிறார். இந்தப் படம் 11.08.2022 அன்று வெளியாகும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதன் ஷூட்டிங் ஜனவரியில் தொடங்க இருக்கிறது. படப்பிடிப்பைத் தொடங்கி, ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ராவணனின் நியாயம்
இந்நிலையில், இந்தப் படம் பற்றி சைஃப் அலி கான் அளித்த பேட்டியில், ஆதிபுருஷ் திரைப்படம், ராவணன் சீதையை கடத்தியதில் உள்ள நியாயத்தை எனது கேரக்டர் பிரதிபலிக்கும் என குறிப்பிட்டிருந்தார். இந்த கருத்து சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மன்னிப்பு கேட்டார்
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ராம் கடம், சைஃப் அலி கான் கருத்து அதிர்ச்சியளிக்கிறது என்று கூறியிருந்தார். இதனால், தனது கருத்துக்கு சைஃப் அலி கான் மன்னிப்புக் கேட்டார். தன் கருத்தை திரும்பப் பெறுவதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் ஹிமன்சு ஸ்ரீவத்சவா என்ற வழக்கறிஞர் உத்தரபிரதேசத்தில் உள்ள ஜான்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

புண்படுத்தும் வகையில்
சைஃப் அலிகான் கருத்து, இந்துக்கள் உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளது. படத்தின் கருத்தும் இந்து மத நம்பிக்கைக்கு எதிராக உள்ளது. எனவே சைஃப் அலிகான், படத்தின் இயக்குனர் ஓம் ராவத் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு வருகிற 23-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications











