இறையாண்மைக்கு எதிரான படம்... மெர்சலுக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
சென்னை: ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு பற்றி தவறான விபரங்களைத் தந்துள்ள மெர்சல் படத்துக்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மெர்சல். இப்படம் வெளியான நாளிலிருந்து ஏகப்பட்ட சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது.

ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்புக்கு எதிரான வசனங்களால் பாஜக தலைவர்கள் ஒருவாரமாகக் கொந்தளித்து இன்றுதான் அடங்கியுள்ளனர்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் மெர்சல் படத்திற்கு தடை கேட்டு, அஸ்வத்தாமன் என்ற வக்கீல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பான மனுவில், மெர்சல் படத்தில் தேச ஒற்றுமை, இறையாண்மைக்கு எதிரான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த மனுவில், "ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா உள்ளிட்டவை குறித்து தவறான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் சிங்கப்பூரில் இலவச மருத்துவம் அளிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. உண்மையில் சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம் இல்லை.
அடுத்து பெண்களின் தாலியைப் பறிக்கும் மதுவுக்கு ஜிஎஸ்டி இல்லை என்று ஒரு காட்சி. உண்மையில் மதுவுக்குதான் அதிக வரி விதிக்கப்படுகிறது. 58 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை மதுவுக்கு வரி விதிக்கிறோம்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மிகக் கேவலமாக விமர்சித்து, கையை வழித்து நக்கிக் காட்டுவது போல ஒரு காட்சியும் வைக்கப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு கறுப்புப் பணத்தை ஒழிக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கை. அதை இவ்வளவு கேவலமாகக் காட்டுவது, அதுவும் வெளிநாட்டுப் பின்னணியில் காட்டுவது இறையாண்மைக்கு எதிரானது.
இதுகுறித்து கடந்த 20ஆம் தேதி, மத்திய தகவல் மற்றும் ஒளி பரப்புத்துறை அமைச்சகத்துக்கு புகார் மனு அனுப்பினேன்.
முன்னதாக அப்பாஸ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், கருத்து சுதந்திரம் என்பது பணம் சம்பாதிக்க திரைப்படத்துறையினருக்கு வழங்கப்பட்ட உரிமமாக கருதக்கூடாது. மற்றவற்றை விட பல மடங்கு அதிக தாக்கத்தை திரைப்படத்தில் இடம்பெறும் காட்சிகள், மக்கள் மனதில் உருவாக்குகின்றன' என்று தீர்ப்பளித்துள்ளது.
மேலும் மெர்சல் படத்திற்கு சென்சார் கேட்டு, கடந்த 16ஆம் தேதி விண்ணப்பித்த நிலையில், ஒரே நாளில் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரணங்களை எல்லாம் கருத்தில் கொண்டு, மெர்சல் படத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இப்படத்திற்கு வழங்கப்பட்ட 'சென்சார்' சான்றிதழை திரும்பப் பெற வேண்டும் என்று சென்சார் வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும்," என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். விரைவில் விசாரணைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications











