சினிமாவில் பயன்படுத்தும் டம்மி ஆயுதங்களை கொண்டுச் செல்ல உரிமம் வேண்டும்.. உயர்நீதிமன்றத்தில் வழக்கு!
சென்னை : திரைப்பட படப்பிடிப்புக்கு தேவையான டம்மி ஆயுதங்களை எந்தவித இடையூறுமின்றி கொண்டு செல்ல ஏதுவாக அவற்றுக்கு உரிமம் வழங்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தென் இந்திய திரைப்பட டம்மி எபக்ட்ஸ் சங்கம் சார்பில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதற்கும் துணிந்தவன்
நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பு, காரைக்குடியில் நடைபெற்ற போது, படப்பிடிப்புக்கு தேவையான டம்மி துப்பாக்கிகளை உதவி இயக்குனர் விக்டர் என்பவர் கொண்டு சென்றார். அவரிடம் இருந்து இந்த டம்மி துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

150 டம்மி துப்பாக்கிகள் பறிமுதல்
சென்னை தி.நகரில் உரிமம் இல்லாமல் வைத்திருந்த 150 டம்மி துப்பாக்கிகளை பறிமுதல் செய்த போலீசார் ஆயுத தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வழக்கு
இதையடுத்து படப்பிடிப்புக்கு பயன்படுத்தும் டம்மி ஆயுதங்களை கொண்டு செல்வதற்குரிய நடைமுறைகளை வகுக்க காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி தென் இந்திய திரைப்பட டம்மி எபக்ட்ஸ் சங்கம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இதுவரை நடவடிக்கை இல்லை
அந்த மனுவில், டம்மி ஆயுதங்கள் கொண்டு செல்வவதற்குரிய நடைமுறைகளை வகுக்க கோரி 2014ம் ஆண்டு விண்ணப்பம் அளிக்கப்பட்டதாகவும், அதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிமம் வழங்கவும்
சமீபத்தில் மும்பை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், மும்பை போலீசார், டம்மி ஆயுதங்களுக்கு எண்ணிட்டு, உரிமம் வழங்கும் நடைமுறையை வகுத்துள்ளதாகவும், அதேபோல தமிழகத்தில் டம்மி ஆயுதங்களுக்கு உரிமங்கள் வழங்குவதுடன், தங்கள் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











