Mansoor Ali Khan - மன்னிப்பு கேட்க மறுத்த மன்சூர் அலிகான்.. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை
சென்னை: Mansoor Ali Khan Trisha Controversy (மன்சூர் அலிகான் த்ரிஷா சர்ச்சை) த்ரிஷா பற்றி ஆபாசமாக பேசியதற்காக நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் மன்சூர் அலிகான். சினிமாவிலிருந்து சில காலம் ஒதுங்கியிருந்தபோதும் பேட்டிகளில் தான் செய்த சேட்டைகளாலும், அரசியலில் நின்றதாலும் லைம் லைட்டிலேயே இருந்தார். சூழல் இப்படி இருக்க அவரை லோகேஷ் கனகராஜ் லியோ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். மன்சூரும் தன்னுடைய கேரக்டரை நன்றாகவே செய்திருந்தார்.

ஆபாச பேச்சு: சூழல் இப்படி இருக்க அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசினார். அவரது இந்தப் பேச்சுக்கு த்ரிஷா தனது கடும் எதிர்வினையை ஆற்றி மன்சூர் அலிகான் எல்லாம் மனித குலத்துக்கே இழுக்கு என்றார். த்ரிஷா மட்டுமின்றி திரையுலகிலிருந்து வேறு சிலரும் தங்களது கண்டன குரல்களை தொடர்ந்து பதிவு செய்துவருகின்றனர். ஆனால் டாப் ஹீரோக்கள் யாரும் இதுவரை வாய் திறக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
மன்னிப்பு கேட்க மறுப்பு: இந்த விவகாரம் பூதாகரமானபோது விளக்கம் ஒன்றை அளித்தார் மன்சூர். அதில், தான் எதுவும் தவறாக பேசவில்லை. த்ரிஷாவிடம் கட் பண்ணி தவறாக காண்பித்திருக்கிறார்கள். நாட்டில் எவ்வளவோ பிரச்னை இருக்கிறது. போய் பொழப்ப பாருங்க என்று அலட்சியமாக தெரிவித்திருந்தார். அதனை பார்த்த பலரும் மேலும் கொந்தளிப்படைந்தனர்.
செய்தியாளர் சந்திப்பு: இந்த சூழலில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் மன்சூர் அலிகான். அப்போது நடிகர் சங்கம் தனக்கு எதிராக வெளியிட்ட கண்டன அறிக்கையை 4 மணி நேரத்துக்குள் திரும்ப பெற வேண்டும் என்றும் தன்னை வைத்து நடிகர் சங்கம் நல்ல பெயர் சம்பாதிக்க முயற்சிக்கிறது. அங்கு இருப்பவர்கள் எல்லாம் என்ன யோக்கியர்களா? தமிழ்நாடே என் பக்கம்தான் இருக்கிறது என்றும் தெரிவித்திருந்தார்.
தேசிய மகளிர் ஆணையம்: மன்சூர் அலிகானின் இந்தப் பேச்சு யாரையும் கவரவில்லை. அதுமட்டுமின்றி ஒரு மன்னிப்போ வருத்தமோ தெரிவிப்பதில் என்ன வந்துவிடப்போகிறது என்ற குரல்களும் கேட்க ஆரம்பித்திருக்கின்றன. இதற்கிடையே மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தேசிய மகளிர் ஆணையமும் டிஜிபிக்கு உத்தரவிட்டிருந்தது.
வழக்குப்பதிவு: இந்நிலையில் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதாவது இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 354 - A, பிரிவு 509 (பெண்களை சீர்குலைக்கும் வார்த்தை, சைகை அல்லது செயல்) பிரிவுகளின் கீழ் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. விரைவில் மன்சூரிடம் விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











