பட வாய்ப்புக்காக ஒருவரை நம்பி ஏமாந்த கார்த்தி பட நடிகை
மும்பை: காஸ்டிங் ஏஜெண்ட் தன்னை ஏமாற்றியதாக பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி தெரிவித்துள்ளார்.
கனடாவை சேர்ந்தவர் நோரா ஃபதேஹி. தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார். பெரும்பாலும் கவுரவத் தோற்றத்தில் நடிக்கிறார். பாகுபலி, கார்த்தியின் தோழா படங்களிலும் குத்துப்பாட்டு டான்ஸ் ஆடியுள்ளார்.
அவர் தற்போது வருண் தவானின் ஸ்ட்ரீட் டான்ஸர் இந்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் தனது திரையுலக பயணம் குறித்து கூறியதாவது,

வெளிநாட்டவர்கள்
இந்தியாவில் வெளிநாட்டவர்கள் வாழ்வது எளிது அல்ல. நாங்கள் நிறைய கஷ்டப்படுகிறோம், அது யாருக்கும் தெரிவது இல்லை. எங்களிடம் இருந்து பணம் பறிக்கிறார்கள். எனக்கும் நடந்துள்ளது. என்னை கனடாவில் இருந்து இங்கு அழைத்து வந்த ஏஜென்சி ரொம்ப மோசம், அவர்கள் என்னை சரியாக வழிநடத்தவில்லை. அதனால் அந்த ஏஜென்சியில் இருந்து வெளியேற நினைத்தேன்.

பணம்
ஏஜென்சியில் இருந்து வெளியேறினால் உங்களின் ரூ. 20 லட்சம் பணத்தை திருப்பிக் கொடுக்க மாட்டோம் என்றார்கள். நான் விளம்பர படங்களில் நடித்து சம்பாதித்த ரூ. 20 லட்சத்தை இழந்தேன். இந்த பணம் போனால் என்ன கஷ்டப்பட்டு உழைத்து இதைவிட நிறைய சம்பாதிக்கலாம் என்று நினைத்தேன்.

அபார்ட்மென்ட்
8 பெண்களுடன் சேர்ந்து ஒரு அபார்ட்மென்ட்டில் இருந்தேன். அந்த அபார்ட்மென்ட்டுக்குள் நுழைந்தபோது அதிர்ச்சி அடைந்தேன். என்னுடன் தங்கியிருந்தவர்கள் என் பாஸ்போர்ட்டை திருடிவிட்டனர். அதனால் என்னால் கனடாவுக்கு செல்ல முடியாமல் போனது. அந்த அபார்ட்மென்ட்டில் வசித்தது எல்லாம் கொடுமை.

ஆடிஷன்
நான் இந்தி கற்கத் துவங்கினேன். ஆனால் ஆடிஷன்களில் எனக்கு ரொம்ப கஷ்டமாக இரு்தது. நான் மனதளவில் தயாராகாததால் மிகவும் சிரமப்பட்டேன். நான் ஏதோ ஒரு சர்கஸ் போன்று என் கண் முன்பே என்னை கேலி செய்து சிரித்தார்கள். என்னை சீண்டிப் பார்த்தார்கள். நான் ஆடிஷன் முடிந்து வீட்டிற்கு செல்லும் வழி எல்லாம் அழுது கொண்டே சென்றேன். ஒரு காஸ்டிங் ஏஜெண்டோ, நீ தேவையில்லை, திரும்பிப் போ என்றார். அதை நான் ஒருபோதும் மறக்கவே மாட்டேன் என்று நோரா ஃபதேஹி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











