”அண்ணா” காட்சியை நீக்குங்க.. அப்புறமா சர்டிபிகேட் பற்றி பேசலாம்.. பராசக்திக்கு செக் வைத்த சென்சார்
சென்னை: சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள படம் பராசக்தி. 1960 கால கட்டங்களில் தமிழ்நாட்டில் நடைபெற்ற மொழிப்போர் அதாவது, இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரவேற்க காத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கும்போது படம் நாளை வெளியாகும் என்று பார்த்தால், படத்திற்கு இன்னும் சென்சார் சான்றிதழே கிடைக்கப்பெறவில்லை என்ற தகவல் ரசிகர்களை திடுக்கிடச் செய்துள்ளது.

அதாவது சென்சார் சார்பில் சுமார் 23 கட்கள் வரை சொன்னதாகவும், அதனால் தான் படக்குழு ரிவைசிங் கமிட்டிக்கு சென்றதாகவும் கூறப்பட்டது. இப்படி இருக்கையில் தற்போது டிரைலரில் இடம் பெற்று ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்து, வரவேற்பைப் பெற்ற, மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாதுரை காட்சிகளை படத்தில் இருந்து மொத்தமாக நீக்க வேண்டும் என்று சென்சார் தரப்பில் தெரிவித்துள்ளனர். அந்த காட்சிகளை நீக்கிவிட்டு வந்தால் சென்சார் தருகிறோம் என்று தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது மொத்த கோலிவுட்டையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. பேரறிஞர் அண்ணாதுரை கதாபாத்திரத்தில் நடிகர் சேத்தன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக படம்: பராசக்தி படத்தின் அறிவிப்பு வந்ததில் இருந்து இந்த படம் திமுகவின் படம், இந்த படம் 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுகவுக்கு குறைந்தபட்ச உதவியைச் செய்யும் என்று எல்லாம் கருத்துகள் பரவி வந்தது. அதனால் தான் மறைந்த முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் கதை, திரைக்கதையில் உருவான படமான பராசக்தி படத்தின் டைட்டிலை பெற்றுள்ளார்கள் என்று எல்லாம் தகவல் வெளியானது.
அண்ணாதுரை: படத்தின் டிரைலர் வெளியாகும் போது, பேரறிஞர் அண்ணாதுரை மொழிப்போர் தொடர்பாக நடைபெற்ற ஒரு போராட்டம் குறித்து தனது கருத்து சொல்வது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. அதாவது, “ நாங்கள் இதற்கு பின்னால் இல்லை.. ஆனால் இதை யார் செய்திருந்தாலும் அவரும் என் தம்பியே” என்று அண்ணா கூறுவது போல இருக்கும். இந்த காட்சிக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு என்பது, திமுகவைச் சேர்ந்தவர்கள் மத்தியில் பெருமளவு கிடைத்தது. இப்படி இருக்கையில் பேரறிஞர் அண்ணா தொடர்பான காட்சிகளை சென்சார் போர்டு நிறுவனம் நீக்கச் சொல்லி இருப்பது படக்குழுவுக்கு மட்டும் இல்லாமல் ரசிகர்களுக்கும் திமுகவினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











