CCL 2025: 101 டார்கெட்.. சென்னை பந்து வீச்சை கிழித்த பெங்கால்.. வாரிக் கொடுத்த சென்னை பவுலர்கள்!
பெங்களூரு: செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் 2025 இன்று முதல் அதாவது பிப்ரவரி 8ஆம் தேதி முதல் தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை அணியும் பெங்கால் அணியும் மோதுகின்றன. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்கால் அணி முதலில் பேட் செய்வதாக அறிவித்தது. முதலில் பேட் செய்த பெங்கால் அணி முதல் இன்னிங்ஸில் அதாவது முதல் 10 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து, 79 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய சென்னை அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் குவித்தது. இதன் மூலம் சென்னை அணி 11 ரன்கள் முன்னிலை வகித்தது.
அதன் பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பெங்கால் அணியின் இன்னிங்ஸை ஜாய் மற்றும் , ராகுல் தொடங்கினர். இவர்கள் இருவரும் சென்னை அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தார். பவர்ப்ளே முடிவில் பெங்கால் அணி விக்கெட் இழப்பின்றி 47 ரன்கள் குவித்தது. என்ன செய்வது எனத் தெரியாமல் சென்னை அணி வீரர்கள் தவித்தனர். பவர்ப்ளே முடிந்ததும் நான்காவது ஓவரின் முதல் பந்தில் ஜாய் தனது விக்கெட்டை சிக்ஸர் அடிக்க முயற்சி செய்து பறிகொடுத்தார்.

ஆனாலும் அணியின் ஸ்கோர் அதிகரித்துக் கொண்டே இருந்தது. 4வது ஓவரிலேயே பெங்கால் அணி 50 ரன்களைக் கடந்துவிட்டது. சென்னை அணி தரப்பில் இருந்த பந்துவீச்சாளர்கள் யாரைப் பயன்படுத்தினாலும், பெங்கால் வீரர்கள் அவர்களுக்கு அதிரடி விருந்து வைக்க தவறவில்லை. 5 ஓவர்கள் முடியும்போது பெங்கால் அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 64 ரன்கள் குவித்திருந்தது. அப்போது பெங்கால் அணி 53 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
சிக்ஸர் மழை: அதன் பின்னர் வந்த ஆனந்தாவும் ராகுல் உடன் இணைந்து பவுண்டரி, சிக்ஸர் என மாறி மாறி விளாசினார். இதனால் ரன்கள் சீராக உயர்ந்து கொண்டே இருந்தது. 7 ஓவர்கள் முடியும்போது ஆனந்தா காயம் காரணமாக வெளியேறினார். அப்போது பெங்கால் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 81 ரன்கள் குவித்திருந்தது. அதன் பின்னர், ஜாமி களமிறங்கினார். அவர் களமிறங்கி ஒரு பந்தைச் சந்தித்து ஒரு ரன்னும் எடுத்துவிட்டார். அதன் பின்னர் சென்னை அணி வீரர்கள், போட்டியின் விதியைக் கூறி, ஜாமியை வெளியேற்றினர். அதாவது முதல் இன்னிங்ஸில் முதல் மூன்று இடங்களில் களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் அந்த ஆர்டருக்குள் களமிறங்க கூடாது என்பதுதான் அந்த விதி.
ராகுல்: இதனால் ஜாமி வெளியேறினார். அதன் பின்னர், வந்த ரத்தன் தீப் வந்து ஒரு ரன் ரன் எடுத்ததும் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இப்போது, ஜாமி களமிறங்கினார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தாலும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய, ராகுல் சிறப்பாக விளையாடி வந்தார். ஆனால் அவரது விக்கெட்டினை 9வது ஓவரின் முதல் பந்தில் ராகுல் தனது விக்கெட்டை சென்னை கேப்டன் விக்ராந்த் பந்தில் தசரத்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இவர் 20 பந்தில் 4 பவுண்டரி, இரண்டு சிக்ஸர் உட்பட மொத்தம் 38 ரன்கள் குவித்திருந்தார்.
101 டார்கெட்: ராகுல் தனது விக்கெட்டை இழந்த பின்னர், அணியின் ஸ்கோர் உயர்வதில் தொய்வு ஏற்பட்டது. கடைசி ஓவரில் அதிரடியாக விளையாட முயற்சி செய்த ஜாமியும் தனது விக்கெட்டை இழந்தார். ஆனால் அதன் பின்னர் வந்த, ஜிஷு தான் எதிர்கொண்ட முதல் பந்தையே சிக்ஸருக்கு விளாசி அணியின் ஸ்கோரை 100 ரன்களைக் கடக்க வைத்தார். இன்னிங்ஸின் கடைசி பந்தையும் சிக்ஸருக்கு விளாசினார். இரண்டாவது இன்னிங்ஸ் முடியும்போது, பெங்கால் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் குவித்தது. இதனால் சென்னை அணியை விட 100 ரன்கள் முன்னிலை வகித்தது. சென்னை அணி 101 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறும்.


Click it and Unblock the Notifications











