CCL 2025: பரத் தான் காரணமே.. பெங்கால் டைகர்ஸிடம் அடி வாங்கிய சென்னை.. ஆரம்பமே சறுக்கல்!
பெங்களூரு: செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் 2025 இன்று முதல் அதாவது பிப்ரவரி 8ஆம் தேதி முதல் தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை அணியும் பெங்கால் அணியும் மோதியது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்கால் அணி முதலில் பேட் செய்வதாக அறிவித்தது. இறுதியில் பெங்கால் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பேட் செய்த பெங்கால் அணி முதல் இன்னிங்ஸில் அதாவது முதல் 10 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து, 79 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய சென்னை அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் குவித்தது. இதன் மூலம் சென்னை அணி 11 ரன்கள் முன்னிலை வகித்தது. அதன் பின்னர் பெங்கால் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை அதிரடியாக ஆட, இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் பெங்கால் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் குவித்தது. இதனால் பெங்கால் அணி 100 ரன்கள் முன்னிலை வகித்தது. சென்னை அணிக்கு 101 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.

இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணிக்கு ஓவருக்கு ஓவர் சரிவுதான். பவர்ப்ளேவில் சென்னை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 26 ரன்கள் சேர்க்க, 4வது ஓவரின் இரண்டாவது பந்தில் விக்ராந்த் விக்கெட்டை பெங்கால் அணி சர்ச்சைக்குரிய முறையில் கைப்பற்றியது. இதனால் சென்னை அணி வீரர்கள் மைதானத்தில் நடுவர்களிடம் முறையிட்டனர். விக்ராந்த் விக்கெட்டை இழந்தார் என, மூன்றாவது நடுவர் அறிவித்ததால் சென்னை அணி வீரர்கள் வேறு வழி இல்லாமல் அமைதி ஆனார்கள்.
போராட்டம்: அதன் பின்னர், பாரி களமிறங்கினார். களத்தில் இருந்த ப்ரித்திவியுடன் இணைந்த பாரி, பொறுப்புடன் ஆடினார். ஆனால் அணியின் வெற்றிக்கு 200 ஸ்டிரைக் ரேட்டில் ஆடவேண்டும் என்ற நெருக்கடியும் இருந்தது. அதை உணர்ந்து பொறுப்புடன் ஆடி வந்தார். ஆட்டத்தில் 7 ஓவர்கள் முடிந்த பின்னர் பாரி, தனது விக்கெட்டை ரிடையர் ஹர்ட் முறையில் கொடுத்து வெளியேறினார். அதன் பின்னர் தசரத் களமிறங்கினார். அதன் பின்னர் ப்ரித்விவ் தனது விக்கெட்டை ஜாமி பந்தில் போல்ட் முறையில் இழக்க, அடுத்து வந்த ரமணாவும் தான் சந்தித்த முதல் பந்தில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார். 8 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட்டுகளை இழந்து, 59 ரன்கள் சேர்த்திருந்தது.
தோல்வி: இதனால் சென்னை அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 42 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரில் தசரத் இரண்டு சிக்ஸர்கள் பறக்கவிட்டார் மேலும் இரண்டு ரன்கள் சேர்த்ததால், கடைசி ஓவரில் வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் ஷரன் ஒரு ரன் எடுக்க, கடைசி ஐந்து பந்துகளில் 27 ரன்கள் தேவைப்பட்டது. இரண்டாவது பந்தை எதிர்கொண்ட தசரத் தவறவிட, மூன்றாவது பந்தினை சிக்ஸருக்கு விளாசினார். நான்காவது பந்தினை தவறவிட, ஐந்தாவது பந்தில் இரண்டு ரன்கள் எடுக்கப்பட்டது. கடைசி பந்தையும் சிக்ஸருக்கு விளாச, சென்னை அணி இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில், 5 விக்கெட்டுகளை இழந்து 88 ரன்கள் சேர்த்து, 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
பரத்: நடப்புச் சாம்பியன் பெங்கால் டைகர்ஸ் அணி இந்த சீசனையும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது. சென்னை அணியின் தோல்வி வித்தியாசம் 12 ரன்களாக உள்ளதால், ரசிகர்கள் பலரும் பரத் தான் தோல்விக்கு காரணம் என அவரைக் கை காட்டி வருகின்றனர். அவர் அதிகப்படியான எக்ஸ்ட்ராஸ் போட்டுக் கொடுத்ததுதான் சென்னை அணி தோல்வியை தழுவி உள்ளது எனக் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











