CCL 2025: கிச்சா சுதீப் அணியை சமாளிப்பாங்களா சென்னை ரைனோஸ்? நாளை பலப்பரீட்சை!
ஹைதராபாத்: செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் 2025 கடந்த 8 ஆம் தேதியில் இருந்து வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. 20 ஓவர் கிரிக்கெட் என்றாலும் அதனை மொத்தம் நான்கு இன்னிங்ஸ்களாக பிரித்து விளையாடி வருகிறார்கள். இந்த சீசனில் மொத்தம் 7 அணிகள் களமிறங்கியுள்ளது. இதில் இதுவரை நடைபெற்ற போட்டிகளை வைத்துப் பார்க்கும்போது, பெங்கால் டைகர்ஸ் அணியும் கர்நாடகா புல்டோசர்ஸ் அணியும் மிகவும் பலமான அணியாக உள்ளது. இப்படியான நிலையில் சென்னை ரைனோஸ் அணி நாளை அதாவது பிப்ரவரி 14ஆம் தேதி, கிச்சா சுதீப்பின் கர்நாடகா புல்டோசர்ஸ் அணியை எதிர்க்கொள்ள உள்ளது.
மொத்தம் களமிறங்கியுள்ள 7 அணிகளில் ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் தலா 4 போட்டிகளில் விளையாடும். இதில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள், அடுத்த சுற்றான அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும். அதில் வெல்லும் அணிகள் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இப்படியான நிலையில் இந்த ஆண்டு கோப்பையை வெல்ல அனைத்து அணிகளும் பெரும் முயற்சிகளை செலுத்தி வருகிறது. இதில் இதுவரை நடைபெற்ற லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் அணியான பெங்கால் டைகர்ஸ் அணி தனது முதல் போட்டியில், 13 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை ரைனோஸ் அணியை வீழ்த்தியது. அதன் பின்னர், நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் தே ஷீர் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இதனால் நடப்பு சாம்பியனான பெங்கால் டைகர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. சென்னை அணி ஒரு போட்டியில் விளையாடி அந்த ஒரு போட்டியிலும் தோல்வியைச் சந்தித்தது. இதனால் ரன் ரேட் அடிப்படையில், சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. அதேபோல் ஒரு போட்டியில் விளையாடி அந்த ஒரு போட்டியில் 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பெற்றது, எனவே, கர்நாடகா புல்டோசர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
அடுத்த போட்டி: சென்னை அணி அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் எதிர் வரும் மூன்று போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். இப்படியான நெருக்கடியில் சென்னை ரைனோஸ் அணி பலமான கர்நாடகா ரைனோஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்தப் போட்டி நாளை அதாவது பிப்ரவரி 14 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது. இதையடுத்து சென்னை அணி நாளை மறுநாள் அதாவது பிப்ரவரி 15ஆம் தேதி தெலுகு வாரியர்ஸ் அணியை அதே ஹைதாராபாத் மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது. இந்தப் போட்டி மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

தோல்விக்கான காரணங்கள்: சென்னை அணி கடந்த போட்டியில் பவுலிங்கிலும் பேட்டிங்கிலும் ரொம்பவும் சொதப்பினர். இதில் மிகவும் முக்கியமானது என்றால், பவுலிங்கில் நடந்த சொதப்பல் தான். மேலும் முதல் இன்னிங்ஸில் இருந்த நம்பிக்கை இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடும் போது இல்லை. பேட்டிங்கில் ப்ரித்வியும் பவுலிங்கில் பரத்தும் மோசமாக செயல்பட்டால்தான் சென்னை அணிக்கு தோல்வி ஏற்பட்டது. இது மட்டும் இல்லாமல், விக்ராந்த் விக்கெட் சர்ச்சைக்குரிய முறையில் அவுட் கொடுக்கப்பட்டது ஒரு காரணமாக மாறிவிட்டது.

கேம் பிளான்: எனவே சென்னை அணி கடந்த போட்டியில் செய்த தவறை இந்தப் போட்டியில் செய்யாமல் இருக்க வேண்டும். இது மட்டும் இல்லாமல், வலிமையான கர்நாடகா புல்டோசர்ஸ் அணியை வீழ்த்த வேண்டும் என்றால், அதற்கு என தனி திட்டம் வேண்டும் என ரசிகர்கள் பேசி வருகிறார்கள். சென்னை அணி இந்த போட்டியில் வென்று, வெற்றிக் கணக்கை தொடங்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











