CCL 2025 : தமன் அணியை தட்டித் தூக்கிய கிச்சா சுதீப் அணி.. 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
பெங்களூரூ: செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் 2025 இன்று அதாவது பிப்ரவரி 8ஆம் தேதி தொடங்கியது. இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் முன்னாள் சாம்பியன்கள், தெலுகு வாரியர்ஸ் அணியும் கர்நாடகா புல்டோசர்ஸ் அணியும் மோதியது. இந்தப் போட்டி பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற தெலுகு அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் கர்நாடகா புல்டோசர்ஸ் அணி பேட்டிங் செய்தது.
முதல் இன்னிங்ஸில் கர்நாடகா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக டார்லிங் கிருஷ்ணா 38 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு, 80 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதன் பின்னர் களமிறங்கிய தெலுகு வாரியர்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் கர்நாடக அணி 14 ரன்கள் முன்னிலையுடன் தனது, இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இந்த முறையும் கர்நாடகா அணி சிறப்பான பேட்டிங்கினை வெளிப்படுத்தியதால், இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில், கர்நாடகா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் குவித்தது. இதில் கடைசி ஓவரை வீசிய தமன் மட்டும் இந்த ஒரே ஓவரில் 19 ரன்களை வாரி வழங்கினார். இதனால் தெலுகு அணியின் வெற்றிக்கு 138 ரன்கள் தேவைப்பட்டது.
இலக்கு: இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய தெலுகு அணியின் தொடக்க ஆட்டக்காரர் வரிசையில், களமிறங்கினார். முதல் ஓவரிலேயே தனது விக்கெட்டினை இரண்டு முறை இழக்கும் வாய்ப்பில் இருந்து தப்பினார். தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள, தன்னால் முடிந்தவரை சிறப்பாக விளையாடினார், தமன்.

சரிவு: குறிப்பாக இரண்டாவது ஓவரில் இருந்து தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதில் மூன்றாவது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி, ஒரு சிக்சர் என 19 ரன்கள் குவித்தார். நான்காவது ஓவரில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சாம்ராட் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதே ஓவரில் தமன் வெளியேற, ஐந்தாவது ஓவரில் மேலும் இரண்டு விக்கெட்டுகள் விழ, தெலுகு அணியின் ஆட்டம் 10 பந்துகளுக்குள் தலைகீழாக மாறிவிட்டது. 5 ஓவர்கள் முடியும்போது தெலுகு அணி 4 விக்கெட்டுகளை இழந்து 58 ரன்கள் சேர்த்திருந்தது. அடுத்த 5 ஓவர்களில் தெலுகு அணிக்கு 80 ரன்கள் தேவைப்பட்டது.

வெற்றி: இறுதியில் தெலுகு அணி 9 விக்கெட்டுகளை இழந்து 91 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் கர்நாடகா புல்டோசர்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம், புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்குச் சென்றுள்ளது. முதல் நாளில் இரண்டு போட்டிகள் நடைபெற்றது. முதல் போட்டியில் சென்னை ரைனோஸ் அணியும் பெங்கால் டைகர்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இதில் பெங்கால் டைகர்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications











