CCL 2025: 7 ரன்கள் வித்தியாசத்தில் தமனின் தெலுகு வாரியர்ஸ் த்ரில் வெற்றி.. போராடி தோற்ற போஜ்புரி!
ஹைதராபாத்: செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் 2025 இல் நேற்று அதாவது பிப்ரவரி 14ஆம் தேதி இரண்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் முதல் போட்டியில் சென்னை ரைனோஸ் மற்றும் கர்நாடகா புல்டோசர்ஸ் அணி மோதியது. இதில் கிச்சா சுதீப்பின் கர்நாடகா புல்டோசர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் நடைபெற்ற போட்டியில், தெலுகு வாரியர்ஸ் மற்றும் போஜ்புரி தபாங்ஸ் அணிகள் மோதியது. இந்தப் போட்டியில் தெலுகு வாரியர்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது.
டாஸ் வென்ற தெலுகு வாரியர்ஸ் அணியின் கேப்டன் அகில் அக்கினேனி தங்கள் அணி பேட்டிங் செய்யும் என அறிவித்தார். பேட்டிங்கில் அதிரடியாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட தெலுகு வாரியர்ஸ் அணிக்கு அடிமேல் அடி காத்திருந்தது. தொடக்க வீரர் தொடங்கி களமிறங்கிய 11 வீரர்களில் 5 பேர் டக் அவுட் ஆனார்கள். இதனால் தெலுகு வாரியர்ஸ் அணி, 10 ஓவர்களில் தெலுகு வாரியர்ஸ் அணி 80 ரன்கள் சேர்த்தது. இன்னும் சொல்லப்போனால் 80 ரன்களில் சுருண்டது என்றுதான் கூறவேண்டும். தெலுகு சினிமா பிரபலங்களின் அதிரடியான கிரிக்கெட்டைப் பார்க்க ஆசைப்பட்ட ரசிகர்களுக்கு முதல் 10 ஓவர்கள் என்பது சரியான ஏமாற்றம்தான்.

போஜ்பூரி : அதன் பின்னர் களமிறங்கிய போஜ்புரி தபாங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் சிறப்பாகவும் பொறுப்பாகவும் விளையாடியது. இதனால் முதல் 10 ஓவர்களில் போஜ்புரி தபாங்ஸ் அணி 126 ரன்கள் குவித்தது. இதனால் போஜ்புரி தபாங்ஸ் அணி 46 ரன்கள் முன்னிலை வகித்தது. முதல் இன்னிங்ஸில் தான் சொதப்பிவிட்டோம் இரண்டாவது இன்னிங்ஸில் ஆவது பொறுப்பாக விளையாட வேண்டும் என தெலுகு வாரியர்ஸ் அணி நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது.

இரண்டாவது இன்னிங்ஸ்: இதனால் இரண்டாவது இன்னிங்ஸில் தெலுகு வாரியர்ஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 10 ஓவர்களில், 6 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் சேர்த்தது. இதனால் தெலுகு வாரியர்ஸ் அணி 86 ரன்கள் முன்னிலை பெற்றது. பவுலிங் மற்றும் ஃபீல்டிங்கில் சிறப்பாக விளையாடினால்தான், வெற்றி என்பதை மனதில் வைத்து தெலுகு வாரியர்ஸ் அணி வெறித்தனமாக விளையாடியது. போஜ்புரி தபாங்ஸ் அணிக்கு 10 ஓவர்களில் அதாவது 60 பந்துகளில் 87 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.

வெற்றி: ஆனால் போஜ்புரி அணியின் பேட்டிங் ஆர்டரை தெலுகு வாரியர்ஸ் அணி முழுவதுமாக சிதைத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 10 வது ஓவரின் 5 வது பந்தில் போஜ்புரி தபாங்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 79 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் தெலுகு வாரியர்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தெலுகு வாரியர்ஸ் அணி நடப்புத் தொடரில் தனது வெற்றி கணக்கை தொடங்கி உள்ளது. தற்போது தெலுகு வாரியர்ஸ் அணி புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. இன்று தெலுகு வாரியர்ஸ் அணி சென்னை ரைனோஸ் அணியை எதிர்கொள்கிறது.



Click it and Unblock the Notifications











