CCL ரியல் கெத்து விக்ராந்த்தா? கடைசி பந்தில் விக்கெட்டை எடுத்துட்டு ஓவராக குதித்த பாலிவுட் நடிகர்
சென்னை: செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (CCL) 2026 சீசனின் லீக் சுற்றுப் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்து, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்காக அணிகள் தயாராகிக் கொண்டு உள்ளன. தமிழ் சினிமாவின் வேல்ஸ் சென்னை கிங்ஸ் அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து விடும் என்ற சந்தேகம் பலரிடமும் இருந்தது. இருப்பினும், தங்கள் கடைசி லீக் ஆட்டத்தில் பாலிவுட்டின் மும்பை ஹீரோஸ் அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.
கேப்டன் விக்ராந்தின் சிறப்பான சதம் சென்னை அணியின் இந்த இமாலய வெற்றிக்கு அடித்தளமிட்டது. இந்த போட்டியில் விக்ராந்தின் விக்கெட்டை ஆட்டத்தின் கடைசி பந்தில் கைப்பற்றி விட்டு, மும்பை ஹீரோஸ் அணி வீரர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இதைப் பார்த்த தமிழ் ரசிகர்கள், செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கின் ரியல் கெத்து நம்ம விக்ராந்த் தான் போலயே என்று பதிவிட்டு வருகிறார்கள்.
இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வேல்ஸ் சென்னை கிங்ஸ், 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 225 ரன்கள் குவித்தது. இதில் சென்னை அணியின் கேப்டன் விக்ராந்த் தனி ஒருவராக 66 பந்துகளில் 149 ரன்கள் விளாசினார். அவரது இன்னிங்ஸில் 17 பவுண்டரிகளும் 10 சிக்ஸர்களும் அடங்கும். மொத்த ரன்களான 149-ல் 128 ரன்கள் பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் மூலமே எடுக்கப்பட்டன.

விக்ராந்த் விக்கெட்: முதல் இன்னிங்ஸின் கடைசிப் பந்தில் சிக்ஸர் விளாச முயற்சித்த விக்ராந்த் அந்த பந்தில் தனது விக்கெட்டை இழந்தார். மிட் - ஆன் திசையில் கேட்ச் ஆனார். அவரது விக்கெட்டை கைப்பற்றியதும் மும்பை ஹீரோஸ் அணியைச் சேர்ந்த வீரர்கள் பலரும் துள்ளிக் குதித்து கொண்டாடினர். குறிப்பாக கேட்ச் பிடித்த நடிகரோ, பந்தை ஆக்ரோஷமாக தூக்கி வீசி, கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் போல தொடையைத் தட்டி செலிப்ரேஷன் செய்தார்.
கெத்து: இதைப் பார்த்த தமிழ் ரசிகர்கள், விக்ராந்த் 20 ஓவர்கள் நின்று வெறும் 66 பந்தில் 149 ரன்கள் குவித்து மும்பை அணியை மொத்தமாக முடித்துவிட்டார். அப்படி இருக்கையில் கடைசி பந்தில் டயர்டில் அடித்த பந்தை கேட்ச் பிடித்து விட்டு ஓவராக ஆட்டம் போடுகிறீர்களே? அப்படியானால் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கின் கெத்து நடிகர் விக்ராந்த் தானா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
சென்னை வெற்றி: 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை ஹீரோஸ் அணியால் அந்த இலக்கை எட்ட முடியவில்லை. மும்பை அணி, 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் வேல்ஸ் சென்னை கிங்ஸ் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. இதன்மூலம், சென்னை கிங்ஸ் நான்காவது அணியாக அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











