இயக்குனர் எம்.ராஜேஷ்க்கு இன்று பிறந்தநாள்.. திரைப்பிரபலங்கள் வாழ்த்து!
சென்னை: தமிழ் ரசிகர்களை பல ஆண்டுகளாக தனது புதுமையான காமெடி திரைப்படங்களின் மூலம் இன்றுவரை ரசிக்க வைத்து வரும் மிகப் பிரபலமான இயக்குனர் எம்.ராஜேஷ்.
Recommended Video
காமெடி காட்சிகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக வைக்காமல் படம் முழுவதும் தொடங்கியது முதல் முடியும் வரை காமெடிக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் கொடுத்து திரைப்படங்களை எடுப்பதில் இவர் வல்லவர் ஆவார்.
இவ்வாறு தன்னுடைய திரைப்படங்களின் மூலம் தொடர்ந்து ரசிகர்களை ரசிக்க வைத்து வரும் ராஜேஷ் ஆகஸ்ட் 24 ஆம் தேதியான இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடி வருவதை ஒட்டி இவருக்கு நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஆர்யா, ஜீவா மற்றும் சந்தானம் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

முழுநீள காமெடி
இயக்கிய முதல் மூன்று திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி ஹாட்ரிக் வெற்றியுடன் திரையரங்குகளில் வசூல் மழையை பொழிந்த நிலையில், தமிழில் முழுநீள காமெடி திரைப்படங்களை இயக்கும் திறமை கொண்ட வெகு சில இயக்குனர்களின் பட்டியலில் இயக்குனர் முன்னணியில் ராஜேஷ் இணைந்தார்.

சிவா மனசுல சக்தி
இயக்குனர் அமீர் மற்றும் எஸ்.ஏ சந்திரசேகர் என முன்னணி இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ராஜேஷ், "சிவா மனசுல சக்தி" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகம் செய்யப்பட்டார். நடிகர் ஜீவாவின் கலகலப்பான நடிப்பில் உருவான இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், ஜீவா மற்றும் சந்தானம் இணைந்து செய்யும் காமெடி அட்டூழியங்கள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்ததோடு திரையரங்குகளில் அதிக நாட்கள் ஓடி வசூல் மழையையும் பொழிந்தது.

முன்னணியில் சேர்ந்தார்
இவ்வாறு இயக்கிய முதல் திரைப்படமே மிகப்பெரிய வெற்றி பெற்று தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. சிவா மனசுல சக்தி திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து பாஸ் என்கிற பாஸ்கரன் மற்றும் ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட திரைப்படங்களும் தொடர்ந்து வெற்றி பெற்று ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்ததோடு திரையரங்குகளிலும் வசூலை வாரி குவித்து தமிழ் சினிமாவில் முழுநீள காமெடி திரைப்படங்களை இயக்கும் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராக முன்னணியில் சேர்ந்தார்.

வசனம் எழுதிக் கொடுத்த
நடிகர் சிவகார்த்திகேயன் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" திரைப்படத்தில் இவர் வசனம் எழுதிக் கொடுத்த நிலையில், இந்தப்படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

காமெடிகள் இல்லாததால்
வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்திற்குப் பின் சொல்லி வைத்தார் போல் இவரது திரைப்படங்கள் அடுத்து அடுத்தடுத்து தொடர்ந்து தோல்விகளையும், சுமாரான வெற்றிகளையும் மட்டுமே பெற்று வருகிறது. ஆல் இன் ஆல் அழகுராஜா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, கடவுள் இருக்கான் குமாரு என அடுத்தடுத்த திரைப்படங்களை இவர் தொடர்ந்து இயக்கி வந்தாலும் இவரின் முதல் மூன்று திரைப்படங்களில் இருந்த காமெடிகள் போன்று இந்தத் திரைப்படங்களில் இல்லாததால் இந்த அனைத்து படங்களும் ரசிகர்களை கவரவில்லை.

படுதோல்வியை சந்தித்தது
எனினும் சிவகார்த்திகேயனுடன் இவர் இணைந்த மிஸ்டர் லோக்கல் திரைப்படம், ராஜேஷுக்கு செமயான கம்பேக்காக இருக்கும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில் இந்த திரைப்படமும் படுதோல்வியை சந்தித்தது.

நம்பிக்கையில் ரசிகர்கள்
இவ்வாறு வெற்றியையும் தோல்வியையும் மாறி மாறி சந்தித்துவரும் இயக்குனர் ராஜேஷ் மீண்டும் ஒரு கலகலப்பான முழுநீள காமெடி வெற்றி திரைப்படத்தை கொடுப்பார் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் " வரணும் பழைய பன்னீர் செல்வமா திரும்ப வரணும் " என அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், இவர் தற்போது தமிழில் பிரபலமான நடிகருடன் இணைய உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.

35வது பிறந்தநாள்
இவ்வாறு தமிழ் சினிமாவில் காமெடி ஜனரஞ்சகமான திரைப் படங்களை எடுப்பதிலும், இப்பொழுது இருக்கும் இளசுகளுக்கு ஏற்றவாறு எங் காமெடி
திரைப்படங்களை இயக்குவதிலும் பெயர் போன இயக்குனர் எம்.ராஜேஷ் ஆகஸ்ட் 24ஆம் தேதியான இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஆர்யா, ஜீவா, சந்தானம் உள்ளிட்ட பலர் வாழ்த்துகளை தெரிவித்த நிலையில், இவரின் திரைப்படங்களுக்கு அடிமையான பல ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











