CCL 2025 - மும்பை ஹீரோஸ் Vs போஜ்புரி டபாங்ஸ்.. யார் வென்றது தெரியுமா?.. பந்தாடப்பட்ட மும்பை
டெல்லி: செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கின் இரண்டாவது நாளில் நடைபெற்ற நான்காவது போட்டியில் மும்பை ஹீரோஸ் அணியும், போஸ்புரி டபாங்ஸ் அணியும் டெல்லியில் இருக்கும் அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று மாலை மோதின. எதிர்பார்ப்புடன் தொடங்கிய போட்டி பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நகர்ந்தது. இரண்டு அணிகளுமே தங்களுடைய திறமையை முழுவதுமாக வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்தனர்.
சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடர் கடந்த எட்டாம் தேதியிலிருந்து தொடங்கி நடந்துவருகிறது. பெங்களூரில் நடந்த முதல் போட்டியில் சென்னை ரைனோஸ் அணியும், பெங்கால் டைகர்ஸ் அணியும் மோதின. இதில் பெங்கால் டைகர்ஸ் அணி வெற்றி பெற்றது. அடுத்து நடந்த போட்டியில் கர்நாடகா புல்டோஸர்ஸ் அணியும், தெலுங்கு வாரியர்ஸ் அணியும் மோதியதில் கர்நாடகா புல்டோஸர்ஸ் அணி வெற்றியடைந்தது. தொடர்ந்து டெல்லியில் நேற்று பெங்கால் டைகர்ஸ் அணியும், பஞ்சாப் டி ஷெர் அணிகளும் மோதிய போட்டியில் பெங்கால் அணி வெற்றி பெற்றது.

நான்காவது போட்டி: சூழல் இப்படி இருக்க நேற்று மாலை 6.30 மணிக்கு தொடங்கிய நான்காவது போட்டியில் மும்பை ஹீரோஸ் அணியும், போஜ்புரி டபாங்ஸ் அணியும் மோதின. இரண்டு அணிகளுக்கும் இந்த சீசனில் முதல் போட்டி என்பதால் எப்படியாவது வெற்றி பெற்று முதல் வெற்றியை பதிவு செய்திட வேண்டும் என்கிற முனைப்பில் களமிறங்கின. ரசிகர்களும் ஓரளவுக்கு போட்டியை காண்பதற்கு டெல்லி மைதானத்துக்கு படையெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை ஹீரோஸ் அணியின் விவரம்: மும்பை அணியில் ஷகீப் சலீம் (கேப்டன்), சோஹைல் கான், அபூர்வா லகியா, நவ்தீப் டோமர், ராஜா பெர்வானி, சமீர் கோச்சர், அபிலாஷ் சௌதரி, ஷபீர் அலுவாலியா, ஷரத் கெல்கர், சிதான் மூலே, ஃப்ரெடி தருவாலா, மாதவ், முடாசிர் ஜாஃபர், ராஜ்னியேஷ் டக்கல், சந்தீப் ஜுவாத்கர், வட்சல் சேத் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தார்கள்.
போஜ்புரி டபாங்ஸ்: அதேபோல் போஜ்புரி அணியில், மனோஜ் திவாரி (கேப்டன்), ஆதித்யா ஓஜா, அன்ஷுமான் சிங், அஸ்கர் கான், அயாஸ் கான், தினேஷ் லால் யாதவ், ஜெய், கே.சுதிர் சிங், கேஷரி லால், குணால் சிங், மன்மோகன் சிங், பர்வேஷ் லால் யாதவ், ராஜிவ் ரிஷி, ரவி கிஷன், ரோஹித் சிங், உதய் திவாரி, வைபவ் ராய், விஜய்குமார் டோக்ரா, விகாஷ் சிங், விக்ராந்த் சிங் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தார்கள்.
போட்டியில் என்ன நடந்தது: டாஸ் வென்ற மும்பை ஹீரோஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி பத்து ஓவர் கொண்ட முதல் இன்னிங்ஸில் அந்த அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை எடுத்தது. அடுத்து ஆடிய போஜ்புரி டபாங்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களை எடுத்து 25 ரன்கள் லீடோடு முடித்தது தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய மும்பை அணி 128 ரன்களை மட்டுமே எடுத்து 103 ரன்களை போஜ்புரி அணிக்கு டார்கெட்டாக வைத்தது.
வெற்றி பெற்ற போஜ்புரி: 103 ரன்களை சேஸ் செய்த போஜ்புரி அணி இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து டார்கெட்டை அடைந்து வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. மும்பை அணியை பொறுத்தவரை முதல் இன்னிங்ஸில் கேப்டன் ஷகீப் சலீமும் (35 ரன்கள்), சிதாந்த் முலேவும் (37) ஓரளவுக்கு சிறப்பாக ஆடினார்கள். போஜ்புரியில் அஸ்கர் கான் சிறப்பாக விளையாடி முதல் இன்னிங்ஸில் 96 ரன்களை எடுத்தார். இரண்டாவது இன்னிங்ஸை பொறுத்தவரை மும்பை அணியின் ஷபீர் அலுவாலியா 82 ரன்கள் எடுத்தார். போஜ்புரி அணியில் அஸ்கர் கான் 58 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்து அணியின் வெற்றிக்கு உதவினார்.


Click it and Unblock the Notifications











