Vadivelu - மாமன்னனில் ஆரம்பித்த பந்தம்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசை கச்சேரியில் பாடும் வடிவேலு
சென்னை: Vadivelu (வடிவேலு) ஏ.ஆர்.ரஹ்மான் சென்னையில் நடத்தவிருக்கும் இசை கச்சேரியில் வடிவேலு சில பாடல்களை பாடவிருக்கிறார்.
ரோஜா படத்தில் அறிமுகமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் முதல் படத்திலேயே தேசிய விருதை வென்று அசத்தியவர். அதன் பிறகு அவர் கோலிவுட்டை ஆட்சி செய்ய ஆரம்பித்தார். அவரது இசையில் வந்த புதிய சத்தங்களும், அவர் போட்ட பல ட்யூன்களும் ரசிகர்களை அவர் வசமாக்கியது. எனவே 90களில் ரஹ்மானின் கொடி உயரவே பறந்தது. பல இயக்குநர்கள் அவரை புக் செய்தனர். தொடர்ந்து பாலிவுட்டுக்கும் சென்றார் அவர்.
இரண்டு ஆஸ்கர்கள்: பாலிவுட்டில் இசையமைத்துக்கொண்டிருந்த ஏ.ஆர். ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார். இந்தியாவில் எப்படி அறிமுகமான முதல் படத்திலேயே தேசிய விருதை வென்றாரோ அதேபோல் ஹாலிவுட்டிலும் தான் அறிமுகமான முதல் படத்திலேயே கோல்டன் க்ளோப் விருதுகளையும், இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் பெற்று அசத்தினார்.

புதுமைகளை புகுத்தும் ஏ.ஆர்.ரஹ்மான்: ஏ.ஆர்.ரஹ்மான் தனது பாடல்களில் எப்போதும் ஏதேனும் ஒரு புதுமையை புகுத்தும் வழக்கம் உடையவர். சமீபத்தில் அவர் இசையமைத்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில்கூட பழங்கால கருவிகளை கொண்டு இசையமைத்தார். இப்படி பல புதுமைகளை புகுத்தி வழக்கமான முறையிலிருந்து மீறி இசையமைப்பது அவரது பழக்கம். அவரது இசையமைப்பில் அண்மையில் பத்து தல, பொன்னியின் செல்வன் 2 படங்கள் வெளியாகின.
கச்சேரியில் பிஸி: திரைப்படங்களுக்கு இசையமைப்பது மட்டுமின்றி வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் இசை கச்சேரி நடத்துவதையும் ஏ.ஆர். ரஹ்மான் வழக்கமாக வைத்திருக்கிறார். அந்தவகையில் அவர் திரைத்துறைக்கு வந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்திருப்பதையொட்டி கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் ஸ்டூடியோ ஒன்றில் இசை கச்சேரி நடத்தவிருக்கிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.
வடிவேலு பாடுகிறார்: இந்த இசைக் கச்சேரி பிரமாண்டமாக நடக்கவிருக்கிறது. இதில் திரையுலக பிரபலங்கள், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியவர்கள் என ஏராளமானோர் கலந்துகொள்ளவிருக்கின்றனர். இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால் இந்த இசை கச்சேரியில் கலந்துகொண்டு வடிவேலுவும் ஏ.ஆர்.ரஹ்மானின் சில பாடல்களை பாடவிருக்கிறார். இதனை வடிவேலு சமீபத்திய பேட்டி ஒன்றில் உறுதிப்படுத்தினார்.
மாமன்னன் பந்தம்: ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் மாமன்னன் படம் ஜூன் 29ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் 'மலையிலதான் தீ பிடிக்குது ராசா' என்ற பாடலை வடிவேலு பாடியிருக்கிறார். அப்போது அவரது திறமையை பார்த்து ரொம்பவே பாராட்டினார் ரஹ்மான். அதனைத் தொடர்ந்து தனது இசை கச்சேரியில் அவர் பாட வேண்டும் என கூறியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.


Click it and Unblock the Notifications











