அமரன் படத்தில் இப்படி ஒரு பஞ்சாயத்தா? காட்சியை உடனடியாக மாற்றிய படக்குழு!
சென்னை: நாட்டிற்காக தனது உயிரை தியாகம் செய்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவான திரைப்படம் அமரன். இப்படத்தில் மேஜர் முகுந்தாக சிவகார்த்திகேயனும். அவரின் மனைவி இந்து ரெபகா வர்கீஸாக சாய் பல்லவியும் நடித்திருந்தனர். தீபாவளிக்கு வெளியான இப்படம் தற்போது வரை நல்ல வசூலை அள்ளி வருகிறது. இந்த படத்தில் ஒரு காட்சியில் மொபைல் எண் இடம்பெற்றிருந்தது. இது சர்ச்சையானதை தொடர்ந்து, ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் அதை மாற்றிவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நடிகர் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய திரைப்படம் அமரன். இந்த படத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, கீதா கைலாசம், ஸ்ரீகுமார் ஆகியோர் நடித்திருந்தனர். படத்தின் ஹீரோயினுக்கும் ஹீரோவுக்கும் அப்போது தான் காதல் மலரும் அப்போது, கதாநாயகி சாய்பல்லவி தனது மொபைல் எண்ணை பேப்பரில் எழுதி போடுவாள், இந்த காட்சியில் அந்த மொபைல் எண் தெளிவாக தெரிந்து இருக்கும். இந்த படத்தை பார்த்த பலர், அது உண்மையிலேயே சாய் பல்லவி நம்பர் என நினைத்துக்கொண்டு அந்த எண்ணுக்கு போன் செய்து தொல்லை கொடுத்துள்ளனர்.

மொபைல் எண் காட்சியால்:இதனால்,மன உளைச்சலுக்கு ஆளான சென்னை அழ்வார் திருநகரை சேர்ந்த வாகீசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அதில், தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான அழைப்புகள் வந்ததால், தன்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை, படிக்க முடியவில்லை, பயணிக்க முடியவில்லை, ஏரோப்ளேன் மோடுக்கு மாற்றுவதற்குள் நூற்றுக்கணக்கான அழைப்புகள் வருகின்றனர். இதனால், பெரும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் கூறி, ஒரு கோடியே 10 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்க ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும், ராஜ்குமார் பெரியசாமிக்கும் உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.
காட்சி மாற்றம்: இந்த வழக்கு நீதிபதி சவுந்தர் முன் விசாரணைக்கு வந்த போது, ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், மனுதாரரின் மொபைல் எண் இடம் பெற்றிருந்த காட்சியில் எண் மறைக்கப்பட்டு, மாற்றப்பட்டுள்ளதாகவும், தணிக்கை குழுவிடம் புதிய தணிக்கை சான்று பெறப்பட்டுள்ளதாக விளக்கமளித்தார். அதைத்தொடர்ந்து, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முனுசாமி, தற்போதும், தொடர்ந்து அழைப்புகள் வருவதாக தெரிவித்தார்.
இதையடுத்து, தொடர் அழைப்புகளால் மனுதாரரின் தனிப்பட்ட உரிமை பாதிக்கப்பட்டுள்ளது உண்மை தான் என்ற போதும், அதற்கு பொது சட்டத்தின் கீழ் தான் நிவாரணம் கோர முடியும் எனவும், ரிட் வழக்கில் இழப்பீடு வழங்கும்படி உத்தரவிட முடியாது எனவும் தெரிவித்த நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்கும்படி, தணிக்கை குழு, ராஜ்கமல் பிலிம்ஸ், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 20ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


Click it and Unblock the Notifications











