விவேக் படம் பதித்த தபால் தலையை வெளியிடும் மத்திய அரசு? தீயாய் பரவும் தகவல்!
சென்னை: விவேக் படம் பதியப்பட்ட தபால் தலையை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்தவர் நடிகர் விவேக்.
கடந்த 16ஆம் தேதி திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவேக் கடந்த 17ஆம் தேதி அதிகாலை மரணமடைந்தார்.

கலாமின் கொள்கை
அவரது மரணம் தமிழ் சினிமாவையும் சினிமா ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. நடிகர் விவேக் நடிகராக மட்டுமின்றி சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் இருந்து வந்தார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் கொள்கையை பின்பற்றி வந்த விவேக், மரம் நடுவதில் ஆர்வம் காட்டி வந்தார்.

மரக்கன்றுகள் நடும் ரசிகர்கள்
இதேபோல் தனது நகைச்சுவை மூலம் சமூக சீர்திருத்த கருத்துக்களையும் கூறிவந்தார். இதனால் சின்னக் கலைவாணர் என அழைக்கப்பட்டார். விவேக் மரணத்தை தொடர்ந்து அவரது நினைவாக அவரது ரசிகர்கள் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.

மத்திய அரசு ஆலோசனை
நடிகர் விவேக்கிற்கு மரியாதை செலுத்தும் வகையில் மத்திய அரசு சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பிரதமர் மோடியிடம் இதுகுறித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தபால் தலை
அதன்படி நடிகர் விவேக்கின் படம் போட்ட தபால் தலையை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரும் வாரங்களில் விவேக்கின் தபால் தலை வெளியிடப்படலாம் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











