சந்திரமுகி 2 ஸ்டார்ட்.. பி. வாசு, ராகவா லாரன்ஸ், வடிவேலு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் டிரெண்டிங்!
சென்னை: சந்திரமுகி 2 படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், வடிவேலு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்க உள்ளனர்.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகம் உருவாகப் போவதாக நீண்ட வருடங்களாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அந்த படத்திற்கான பணிகள் ஆரம்பமாகி உள்ளன.

சரித்திர வெற்றி
மலையாளத்தில் மோகன்லால், சோபனா நடிப்பில் வெளியான மணிச்சித்திரதாழு படத்தை இயக்குநர் பி. வாசு விஷ்ணுவர்தன் மற்றும் செளந்தர்யா நடிப்பில் கன்னடத்தில் ஆப்தமித்ரா எனும் பெயரில் ரீமேக் செய்தார். சந்திரமுகி எனும் டைட்டிலில் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் 2005ம் ஆண்டு வெளியான அந்த படம் சரித்திர வெற்றி பெற்றது.

சந்திரமுகி 2
கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் கழித்து சந்திரமுகி படத்தின் அடுத்த பாகத்தை ஆரம்பிக்க இயக்குநர் பி. வாசு களமிறங்கி உள்ளார். பல முறை சந்திரமுகி 2 படத்தை ஆரம்பிக்க நினைத்தும் அது சரியாக கை கொடுக்கவில்லை. இந்நிலையில், இந்தியன் 2, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களை தயாரித்து வரும் லைகா நிறுவனம் சந்திரமுகி 2 படத்தையும் தயாரிக்க முன் வந்துள்ளது. கீரவாணி இசையமைக்க இந்த படத்திற்கு ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

ரஜினி நடிக்கல
சரவணன் இருக்க பயமேன் என மனநல மருத்துவராக தோன்றி கங்காவுக்கு பிடித்திருக்கும் சந்திரமுகி எனும் மாயையை அறிவியல் மற்றும் ஹாரர் கலந்து விரட்டி அடித்திருப்பார். மீண்டும் ரஜினிகாந்தே சந்திரமுகி 2 படத்தில் நடித்தால் அதன் பிசினஸ் பிச்சிக்கும். ஆனால், இரண்டாம் பாகத்தில் அவர் நடிக்கவில்லை என்பதை முன்னதாகவே அறிவித்து விட்டார்.

ராகவா லாரன்ஸ்
சரவணின் சிஷ்யனாக சந்திரமுகி 2ம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தில், மீண்டும் அதே சந்திரமுகி பேய் தான் வரப் போகிறதா? அல்லது வேறு ஏதாவதா? என்பது தெரியவில்லை. ஹீரோயினாக யார் நடிக்கப் போகிறார்கள் உள்ளிட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

வடிவேலு இருக்காரு
சந்திரமுகி படத்தில் ரஜினிக்கும் வடிவேலுவுக்கும் இடையேயான காமெடி டிராக் செம சூப்பராக வொர்க்கவுட் ஆகி ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கும். சற்றே கவர்ச்சி தூக்கலான காமெடியுடன் சந்திரமுகி காமெடி காட்சிகளில் வடிவேலு கலக்கி இருப்பார். மீண்டும் நடிக்க அனுமதி கிடைத்த நிலையில், சந்திரமுகி 2 படத்திலும் வடிவேலு இணைந்துள்ளார். ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் டிரெண்டாகி வருகிறது.

பேய் படங்களின் நாயகன்
காஞ்சனா சீரிஸ் படங்களில் நடித்த ராகவா லாரன்ஸ் சந்திரமுகி படத்துக்கும் சரியாக இருப்பார் என அவரை புக் செய்திருக்கிறார் இயக்குநர் பி. வாசு. லைகா தயாரிப்பாளர் சுபாஷ்கரன், பி, வாசு, வடிவேலு மற்றும் ராகவா லாரன்ஸ் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் சாவி போட்டுத் திறக்கப்பட்ட அந்த அரண்மனை கதவு டிசைன் உடன் தற்போது டைட்டில் போஸ்டர் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











