Raghava Lawrence: கல்லூரி மாணவரை தாக்கிய பவுன்சர்ஸ்... மன்னிப்புக் கேட்ட ராகவா லாரன்ஸ்!!
சென்னை: லைகா தயாரிப்பில் பி வாசு இயக்கிய சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இரு தினங்களுக்கு (ஆக.25) முன்னர் சென்னையில் நடைபெற்றது.
இதில் கல்லூரி மாணவர் ஒருவரை அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த பவுன்சர்கள் கடுமையாக தாக்கினர். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், ராகவா லாரன்ஸ் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

மன்னிப்புக் கேட்ட ராகவா லாரன்ஸ்: ராகவா லாரன்ஸ் நடிப்பில் பி வாசு இயக்கியுள்ள திரைப்படம் சந்திரமுகி 2. லைகா தயாரித்துள்ள இந்தப் படம் செப்டம்பர் 15ம் தேதி ரிலீஸாகிறது. ராகவா லாரன்ஸுடன் வடிவேலு, கங்கனா ரனாவத், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகியுள்ளதால், ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த சந்திரமுகி 2005ம் ஆண்டு வெளியானது. ரஜினி, வடிவேலு, ஜோதிகா கூட்டணியில் மாஸ் ஹிட் கொடுத்தது சந்திரமுகி. இந்நிலையில் இரண்டாம் பாகத்தில் ரஜினிக்குப் பதிலாக ராகவா லாரன்ஸ், ஜோதிகா கேரக்டரில் கங்கன ரணாவத் ஆகியோர் நடித்துள்ளனர். முதல் பாகத்தில் காமெடியில் கலக்கிய வடிவேலு, இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ராகவா லாரன்ஸ், வடிவேலு, இயக்குநர் பி வாசு, லைகா சுபாஸ்கரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அப்போது பாதுகாப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த பவுன்சர்கள் கல்லூரி மாணவரை தாக்கினர்.
பிரபலங்களுக்கான நுழைவு வாயில் வழியாக உள்ளே சென்றதாக அந்த மாணவர் தாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதனால் அந்த மாணவரை தடுத்து நிறுத்திய பவுன்சர்கள், அவரை கொடூரமாக தாக்கியுள்ளனர். ஒன்றுக்கும் மேற்பட்ட பவுன்சர்கள் சுற்றி வளைத்து தாக்கியதால், அந்த மாணவரும் நிலைகுலைந்து போனார். கல்லூரி மாணவர் மீது பவுன்சர்கள் தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்தச் சம்பவத்துக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், தற்போது ராகவா லாரன்ஸ் அதற்கு மன்னிப்புக் கேட்டுள்ளார். "சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழாவில் மாணவர் தாக்கப்பட்ட சம்பவம், எனக்கோ நிகழ்ச்சி ஏற்பாட்டளர்களுக்கோ தெரியாது. மாணவர் தாக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. இதுபோன்ற நடவடிக்கைகளில் பவுன்சர்கள் ஈடுபடக்கூடாது. இதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











