‘’சந்திரமுகி 2’’யை பயமுறுத்திய மார்க் ஆண்டனி.. தள்ளிப்போக காரணம் இது தானா?
சென்னை: வெள்ளிக்கிழமை வெளியாக இருந்த சந்திரமுகி 2 திரைப்படம் தள்ளிப்போனதற்கு, மார்க் ஆண்டனி படத்தின் மீது இருந்த பயம் தான் காரணம் என்று கூறப்படுகிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா,அபிநயா, ரிது வர்மா, சுனில் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி.

இப்படத்திற்கு ஆரம்பத்தில் பெரிய எதிர்பார்ப்பு இல்லாத நிலையில், இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
மார்க் ஆண்டனி: செப்டம்பர் 15ல் இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் நடிகர் விஷால் முன்னதாக லைக்கா நிறுவனத்திடம் பெற்ற கடனை திரும்ப செலுத்தாததால் படத்திற்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. இதில் படத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் விஷால் தரப்பு மேல்முறையீடு செய்தனர். இதில் விஷாலின் வங்கி கணக்கு விவரங்களை சமர்பிக்கும்மாறு சென்னை உயர்நீதிமன்றம் மார்க் ஆண்டனி படத்தின் மீதான தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.

தடைகளை உடைத்த மார்க் ஆண்டனி: ஆனால் வங்கி கணக்கு விவரங்கள் முரணாக இருந்தால் எதிர்காலத்தில் படம் நடிக்க முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றம் விஷாலை எச்சரித்தது. எது எப்படியோ மார்க் ஆண்டனி படம் பல தடைகளை கடந்து செப்டம்பர் 15ந் தேதி வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியாக உள்ளது. இப்படத்தின் டிக்கெட் புக்கிங் இன்று முதல் தொடங்கி விறுவிறுப்படைந்துள்ளது.
இதுதான் காரணம்: ராகவா லாரன்ஸ் நடித்த சந்திரமுகி 2 படம் செப்டம்பர் 15ந் தேதி வெளியாக இருந்த நிலையில், தொழில் நுட்ப ரீதியான வேலைபாடுகள் இன்னும் முடிவடையாததால், படம் செப்டம்பர் 28ந் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஆனால், மார்க் ஆண்டனி படத்தின் அட்டகாசமான டிரைலரைப் பார்த்து பயந்த படக்குழு, இப்போது படத்தை வெளியிட்டால் மண்ணை கவ்விவிடுவோம் என்ற பயத்தில் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி உள்ளதாக சோஷியல் மீடியாவில் தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











