Chandramukhi 2 Release - சந்திரமுகி 2 ரிலீஸ் எப்போது?.. முழு விவரம் உள்ளே.. வெளியானது லேட்டஸ்ட் தகவல்
சென்னை: Chandramukhi 2 Release (சந்திரமுகி 2 ரிலீஸ்) பி.வாசு இயக்கத்தில் உருவாகியிருக்கும் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு நடிப்பில் பி.வாசு இயக்கிய படம் சந்திரமுகி. கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் 800 நாள்களுக்கு மேல் ஓடி பெரும் சாதனை படைத்தது. அந்தப் படத்தை இப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பினாலும் அமர்ந்து பார்க்கும் ரசிகர்கள் இருக்கின்றனர்.

ரஜினிக்கு மறுவாழ்வு கொடுத்த சந்திரமுகி: ரஜினிகாந்த் கதை, திரைக்கதையில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய படம் பாபா. கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் ரஜினியின் கேரியரில் மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்தது. இதனால் ரஜினிக்கு பெரும் நெருக்கடியும் உருவானது. இப்படிப்பட்ட சூழலில் பி.வாசு சந்திரமுகி கதையுடன் ரஜினியிடம் சென்றார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இருந்தாலும் அதில் ரஜினி நடித்தார். அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டாகி ரஜினிக்கு சினிமாவில் மறுவாழ்வு கொடுத்தது.
சந்திரமுகியாக நடித்து மிரட்டிய ஜோதிகா: படத்தின் வெற்றிக்கு பாடல்கள், வடிவேலுவின் காமெடி எல்லாம் உதவின. இருப்பினும் படத்தில் குறிப்பிடப்பட வேண்டியது ஜோதிகாவின் நடிப்பை. கங்கா என்ற கதாபாத்திரத்தில் சாந்தமாக இருக்கும் ஜோதிகா சந்திரமுகி கதாபாத்திரத்தில் விஸ்வரூபம் எடுத்தார். சந்திரமுகியாக அவர் காட்டிய முக பாவனைகள், வசன உச்சரிப்புகள் என அனைத்தும் ஜோதிகா எனும் மிகச்சிறந்த நடிகையை நீண்ட நாள்கள் கழித்து ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்தது.
சந்திரமுகி 2வைய் இயக்கும் பி.வாசு: இந்தச் சூழலில் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை பி.வாசு இயக்கியிருக்கிறார். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இதில் லாரன்ஸ், வடிவேலு, ராதிகா, கங்கனா ரணாவத் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடந்தது. இப்படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடித்திருக்கிறார். முதல் பாகத்தில் ஜோதிகா நடித்திருந்த நடிப்புக்கு ஈடாக கங்கனா இரண்டாம் பாகத்தில் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது.
எப்போது ரிலீஸ்: படத்தின் ஷூட்டிங் 90 சதவீதம் முடிவடைந்திருக்கும் பாக்கி இருக்கும் காட்சிகளை விரைவில் முடிக்க படக்குழு திட்டமிட்டிருக்கிறது. இதனையடுத்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைவில் தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சந்திரமுகி 2 படமானது விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 14ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

கங்கனாவின் எமோஷனல் ட்வீட்: முன்னதாக, சில மாதங்களுக்கு முன்னர் கங்கனா போர்ஷனுக்கான ஷூட்டிங் முடிந்தது. அப்போது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், " "சந்திரமுகி படத்தில் நான் எனது கதாபாத்திரத்தை முடிக்கவிருக்கும் நிலையில், நான் சந்தித்த பல அற்புதமான மனிதர்களிடம் இருந்து விடைபெறுவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
நான் ராகவா லாரன்ஸுடன் எப்போதும் புகைப்படம் எடுத்ததில்லை. ஏனென்றால் நாங்கள் எப்போதும் திரைப்படத்திற்கான காஸ்டியூமில் இருப்போம். அதனால் கடைசி நாள் காலை படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே புகைப்படம் எடுக்க கோரினேன்" என எமோஷனலாக ட்வீட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











