நயன்தாராவின் ஆவணப்படத்தால் மீண்டும் சிக்கல்.. 5 கோடி நஷ்டம் கேட்கும் நபர்!
சென்னை: நடிகை நயன்தாராவின் ஆவணப்படம் கடந்த மாதம் அவரின் பிறந்த நாள் அன்று வெளியானது. இதில் நானும் ரௌடிதான் படத்தின் காட்சிகளை பயன்படுத்தியதற்காக தனுஷ் 10 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்து இருக்கும் நிலையில், மேலும் ஒரு தயாரிப்பு நிறுவனம் 5 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமண வீடியோ நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன போதும் இணையத்தில் அந்த வீடியோ வெளியாகவே இல்லை. இது குறித்து அறிக்கை வெளியிட்டிருந்த நயன்தாரா, அந்த வீடியோவில் நானும் ரவுடிதான் படத்தின் பாடல் வரிகளை தனது ஆவணப்படத்தில் பயன்படுத்திக்கொள்ள படத்தின் தயாரிப்பாளரான தனுஷை பலமுறை அனுமதி கேட்டும் அவர் அனுமதி தரவில்லை, அவரின் அனுமதிக்காக இரண்டு வருடம் காத்து இருந்ததாக குற்றம்சாட்டி இருந்தார்.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு: இதையடுத்து, நயன்தாராவின் ஆவணப்படம் Nayanthara: Beyond the Fairy Tale என்ற பெயரில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது. இதில், தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை முதல் கல்யாணம் வரை அனைத்து விஷயம் பற்றியும் நயன்தாரா வெளிப்படையாக கூறியிருந்தார். மேலும், அந்த ஆவணப்படத்தில், நயன்தாரா நானும் ரௌடிதான் படத்தின் படப்பிடிப்புத்தள வீடியோக்களை பயன்படுத்தி இருந்தார். தன் அனுமதி இல்லாமல் நயன்தாரா படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்திவிட்டதாக தனுஷின் தயாரிப்பு நிறுவனம் 10 கோடி நஷ்டஈடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மீண்டும் சிக்கல்: இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஜனவரி 8ந் தேதி பதிலளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினமே இறுதி விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் நயன்தாரா என்ன விளக்கம் கொடுக்கபோகிறார் என்று தெரியாத நிலையில். அதே ஆவணப்படத்தில் சந்திரமுகி படத்தை பயன்படுத்தியதற்காக அனுமதி பெறவில்லை என சொல்லி தற்போது 5 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. தனுஷ், நயன்தாரா பிரச்சனையே இன்னும் ஓயாத போது, மீண்டும் ஒரு சிக்கலில் நயன்தாரா சிக்கி உள்ளார்.


Click it and Unblock the Notifications











