Maamannan - மாமன்னனில் வடிவேலுவுக்கு பதில் நடித்திருக்க வேண்டியது இவரா?
சென்னை: Vadivelu (வடிவேலு) மாமன்னன் படத்தில் வடிவேலுவுக்கு பதில் வேறு ஒரு நடிகர் நடிக்கவிருந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.
பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படம் கடந்த ஜூன் 29ஆம் தேதி வெளியானது. வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரின் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியிருந்தது படம். ரசிகர்கள் படத்துக்கு தங்களது பெரும் ஆதரவை வழங்கியிருக்கின்றனர்.

மெகா ஹிட்: குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் நடித்த படங்களிலேயே மாமன்னன் படம்தான் வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டிருக்கிறது. பத்து நாட்களுக்குள்ளாகவே அந்தப் படம் 50 கோடி ரூபாய் வசூலை கடந்து சாதனை படைத்தது. வசூலில் மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. உதயநிதிக்கு கடைசி படம் இப்படி அமைந்தது அவருக்கு நல்ல விஷயம் என்றும் ரசிகர்கள் கூறினர்.
வடிவேலுவை மாற்றிய மாரி செல்வராஜ்: இதுவரை வடிவேலுவை ரசிகர்கள் ஒரு சில படங்களில் சில காட்சிகளை தவிர்த்து நகைச்சுவை நடிகராகவே பார்த்து வந்தனர். ஆனால் இந்தப் படம் ஆரம்பித்து ஷூட்டிங் போய்க்கொண்டிருக்கும்போதே மாரி செல்வராஜ் கொடுத்த பேட்டிகளில் மாமன்னனில் வழக்கமான வடிவேலு இருக்கமாட்டார். இதில் இதுவரை பார்க்காத வடிவேலுவை பார்க்கலாம் என தொடர்ந்து சொல்லிவந்தார்.
வடிவேலுவின் மிரட்டல்: அவர் சொன்னதுபோலவே மாமன்னனில் வேறு வடிவேலுதான் இருந்தார். ஒவ்வொரு காட்சியிலும் தான் எவ்வளவு பெரிய நடிகன் என்பதை உணர்த்தினார். குறிப்பாக மலை மேல் நின்று அவர் அழும் ப்ளாஷ்பேக் காட்சியிலும், இடைவேளை காட்சியில் மகன் மற்றும் சாதி திமிர் பிடித்த ரத்னவேலு (ஃபகத் பாசில்) ஆகியோருக்கு மத்தியில் ந்ன்று நடித்த காட்சியிலும், மரண வீட்டுக்கு சென்று அவமானப்பட்டு வரும் காட்சியிலும் வடிவேலுவின் நடிப்பு உச்சம் சென்றிருந்தது.

விருது வழங்க வேண்டும்: வடிவேலுவின் நடிப்பை ரசிகர்கள் மட்டும் கொண்டாடவில்லை. திரையுலக பிரபலங்களும் அவரது நடிப்பை ஏகத்துக்கும் கொண்டாடிவருகின்றனர். மேலும் அவருக்கு நிச்சயம் விருது கிடைக்கும் என்றும் ஆரூடம் கூறிவருகின்றனர். மாமன்னன் கொடுத்த வெற்றியால் வடிவேலு அடுத்தடுத்து இந்த மாதிரியான கேரக்டர் ரோல்களில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில் வடிவேலு இல்லை: இந்நிலையில் மாமன்னன் வடிவேலு கேரக்டர் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி மாமன்னன் கதையை எழுதும்போது முதலில் இந்த கேரக்டருக்கு சார்லியைத்தான் மாரி செல்வராஜ் யோசித்திருந்ததாக கூறப்படுகிறது. எதற்கு ஒருமுறை வடிவேலுவிடம் கேட்டு பார்க்கலாம் என அவர் யோசித்து கேட்க வடிவேலுவும் ஒத்துக்கொண்டதால் சார்லியை மாரி செல்வராஜ் அணுகவில்லை என பேசப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் சார்லியும் இந்தக் கதாபாத்திரத்திற்கு பொருந்திப்போயிருப்பார். அவரும் மிகச்சிறந்த நடிகர்தான் என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications