மோசடி வழக்கு: லேடி ரஜினியை தேடி வீட்டிற்கு சென்ற போலீஸ்
மும்பை: மோசடி வழக்கு தொடர்பாக உத்தர பிரதேச மாநில போலீசார் சோனாக்ஷி சின்ஹாவை தேடி மும்பையில் உள்ள அவரின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்தாகவும், அதற்காக ரூ. 24 லட்சம் வாங்கிவிட்டு நிகழ்ச்சிக்கு வரவில்லை என்றும் ஏற்பாட்டாளர் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து சோனாக்ஷி சின்ஹா மீது உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான பிரமோத் சர்மா அளித்த புகாரின் பேரில் சோனாக்ஷி உள்ளிட்ட 4 பேர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சோனாக்ஷி சின்ஹாவிடம் வாக்குமூலம் வாங்க மொராதாபாத் போலீசார் வியாழக்கிழமை மும்பை வந்தனர். மும்பை போலீசார் உதவியுடன் சோனாக்ஷி சின்ஹாவின் வீட்டிற்கு சென்றார்கள். ஆனால் அந்த நேரம் சோனாக்ஷி சின்ஹா வீட்டில் இல்லாததால் திரும்பிச் சென்றனர்.
இந்த மோசடி வழக்கு குறித்து சோனாக்ஷி சின்ஹாவின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது,
சோனாக்ஷியின் பெயரை கெடுக்கவே இப்படி செய்கிறார்கள். சோனாக்ஷி யாரையும் ஏமாற்றவில்லை. அவர் நடிக்க வந்த 9 ஆண்டுகளில் நேர்மையாக நடந்து கொண்டுள்ளார். எந்த அதிகாரிகள் தொடர்பு கொண்டாலும் நாங்கள் ஒத்துழைப்பு அளிப்போம். மறைக்க எதுவும் இல்லை. யார் பணத்தையும் மோசடி செய்யவில்லை என்றார்.
முன்னதாக புகார் எழுந்தபோது சோனாக்ஷி தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது,
கடந்த ஆண்டு டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சோனாக்ஷியை அணுகினார். மீண்டும் மீண்டும் கூறியும் சோனாக்ஷிக்கு அளிக்க வேண்டிய சம்பளத்தை அவர் அளிக்கவில்லை.
நாங்கள் ஒப்புக் கொண்டபடி விமான டிக்கெட் எடுக்கவில்லை. மேலும் சோனாக்ஷி மற்றும் அவரின் குழுவினர் மும்பை திரும்பி வர டிக்கெட் கொடுக்கவில்லை. நிகழ்ச்சிக்கு மறுநாள் காலை சோனாக்ஷிக்கு ஷூட்டிங் இருக்கிறது என்று தெரிந்து இப்படி செய்தார்கள்.
சம்பளம் மற்றும் விமான டிக்கெட் கேட்டு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரை பலமுறை அணுகியும் பலனில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளரின் செயலால் சோனாக்ஷி மற்றும் குழுவினர் வேறு வழியில்லாமல் மும்பை விமான நிலையத்தில் இருந்து வீடு திரும்பிவிட்டனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளரின் பேச்சில் உண்மை இல்லை என்றும், தனது பெயரை கெடுத்து பணம் பறிக்கப் பார்க்கிறார் என்றும் சோனாக்ஷி சின்ஹா இன்று தெரிவித்துள்ளார். அந்த நபருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்று அவர் மீடியாவை கேட்டுக் கொண்டுள்ளார்.
அதிகாரிகளுக்கு தன் தரப்பில் இருந்து முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டு வருவதாக சோனா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











