Kasthuri: தெலுங்கர்கள் குறித்து அவதூறு பேச்சு! கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன்!
சென்னை: நடிகை கஸ்தூரி, தமிழ் சினிமாவில் 2000களின் தொடக்கத்தில் இருந்து நடித்து வருகின்றார். முன்னணி நடிகையாக வலம் வர நினைத்தவர், கவனிக்கத் தகுந்த நடிகையாகவே இருந்தார். சினிமாவில் அவரால் பெரிய அளவிற்கு மிளிர முடியவில்லை என்றாலும் அவரது சர்ச்சைப்பேச்சினால் எதாவது பிரச்னையை இழுத்துப் போட்டுக் கொள்கின்றார். அப்படி அண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில், நடிகை கஸ்தூரி பேசிய பேச்சு, பெரும் சர்ச்சையாக மாறியது. இவர் தனது பேச்சில் தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசினார். இதற்காக தலைமறைவாக இருந்த கஸ்தூரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
எஸ்.சி, எஸ்.டி மக்களை வன்கொடுமையில் இருந்து பாதுகாக்க பி.சி.ஆர் சட்டம் இருப்பதைப்போல், பிராமணர்கள் மற்றும் பிற சாதியினரரையும் வன்கொடுமையில் இருந்து பாதுகாக்க பி.சி.ஆர் சட்டம் கொண்டுவர வேண்டும் எனக் கோரிக்கை முன் வைத்து, இந்து மக்கள் கட்சியினர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கலந்து கொண்ட கஸ்தூரி, ஆர்ப்பாட்டத்தின் பிராதான கோரிக்கையை முன்வைத்துப் பேசாமல் தெலுங்கர்கள் குறித்து அவதூறாகப் பேசினார். இதனால் இவரது பேச்சு பெரும் சர்ச்சையாக மாறியது.

இவரது அவதூறு பேச்சினால், தெலுங்கு பேசும் மக்கள் இவர் மீது சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனால் நடிகை கஸ்தூரி மீது மொத்தம் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இதற்கிடையில் நடிகை கஸ்தூரி தனது சமூக வலைதளப்பக்கத்தில் தனது வீட்டில் செய்தியாளர் சந்திப்பு நடத்துவதாக அறிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகை கஸ்தூரி, தான் தெலுங்கர்கள் குறித்து அவதூறான கருத்துக்களைப் பேசவில்லை என வாதாடினார். ஆனால் செய்தியாளர் தரப்பில் அவர் பேசிய காணொளியைக் காட்ட, அதன் பின்னர் மழுப்பலான பதில் அளித்தார்.
கைது: இவர் மீது வழக்கு பதியப்பட்டதால் காவல்துறை இவரைக் கைது செய்ய, தேடினர். ஆனால் கஸ்தூரி தனது வீட்டில் இல்லை. மேலும் அவர் தமிழ்நாட்டில் இல்லை எனவும் தலைமறைவாகிவிட்டதாகவும், தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இவர் முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தினை நாடினார். ஆனால் அவரது முன் ஜாமீன் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. கஸ்தூரியைத் தீவிரமாக தேடிவந்த தமிழ்நாடு காவல்துறை கடந்த 17ஆம் தேதி தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் வைத்து கைது செய்தது.
சிறப்புக் குழந்தை: அதன் பின்னர் அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றம் இவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைத்தது. இதனால் நடிகை கஸ்தூரி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் தனது வழக்கறிஞர் மூலம் நிபந்தனை ஜாமீனுக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தினை நாடினார். குறிப்பாக, “ தான் தனிமையில் வசித்து வருவதாகவும். கணவரின் ஆதரவு கிடையாது. எனக்கு குழந்தை உள்ளது.என் மீதான வழக்கிற்கு நான் தலைமறைவாகவில்லை. என்னுடைய சென்னை வீட்டில் காவல்துறை சம்மன் நோட்டீஸ் ஒட்டியது தனக்குத் தெரியாது. என்னை சிறையில் அடைத்தால் எனது குழந்தையின் மனநிலை பாதிக்கபடும். எனவே எனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
நிபந்தனை ஜாமீன்: இந்நிலையில் அவருக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வாதிடும்போது, கஸ்தூரியின் குழந்தை சிறப்புக் குழந்தை எனவும் எனவே ஜாமீன் வழங்கவேண்டும் எனவும் வாதிடப்பட்டது. கஸ்தூரி தரப்பு வாதத்திற்கு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படாததால், நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.


Click it and Unblock the Notifications











