Chennai International Film Festival: சென்னை சர்வதேச திரைப்பட விழா.. 12 தமிழ் படங்களுக்கு அங்கீகாரம்
சென்னை: 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 14 தொடங்கி 21ம் தேதி வரை நடைபெறுகிறது.
சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமான இந்த விழாவில், ஏராளமான திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 12 தமிழ்ப் படங்கள் திரையிடப்படுவது குறிப்பிடத்தக்கது.

சென்னை சர்வதேச திரைப்பட விழா
சமீபத்தில் கோவா சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வரும் 14ம் தேதி சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்குகிறது. 8 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பல மொழிகளைச் சேர்ந்த ஏராளமான திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. தமிழில் மொத்தம் 12 படங்கள் திரையிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, மாமன்னன், அயோத்தி, அநீதி, கருமேகங்கள் கலைகின்றன. போர் தொழில், ராவண கோட்டம், சாயாவனம், செம்பி, ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன், உடன்பால், விடுதலை 1, Vindhya Victim Verdict V3 ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன. அதேபோல், சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த உலக சினிமாக்கள் பலவும் திரையிடப்படவுள்ளன. இதனால் சினிமா ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
உதயநிதி, வடிவேல் நடித்த மாமன்னன் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மாரி செல்வராஜ் இயக்கிய இந்தப் படம் அடையாள அரசியல் குறித்து அழுத்தமாக பேசியிருந்தது. அதேபோல் சாந்தனு நடிப்பில் வெளியான ராவணக் கோட்டம் படமும் ஜாதிய அரசியலை பின்னணியாக வைத்து உருவானது குறிப்பிடத்தக்கது.
சசிகுமார் நடித்த அயோத்தி திரைப்படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. மத நல்லிணக்கத்தை அடிப்படையாக வைத்து உருவான இந்தப் படம், தற்போது சர்வதேச திரைப்பட விழாவில் மேலும் கவனம் பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அதேபோல், வெற்றிமாறனின் விடுதலை 1, வசந்தபாலன் இயக்கிய அநீதி திரைப்படங்களுக்கும் அதிக எதிர்பார்ப்புகள் காணப்படுகின்றன.
அதேபோல், உடன்பால் படத்துக்கும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரபு சாலமன் இயக்கத்தில் அஷ்வின், கோவை சரளா நடித்த செம்பி படத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. 12 தமிழ்ப் படங்களுடன் மற்ற மொழி சினிமாக்களும் ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











