சமரசத்திற்கு இரு தரப்பும் ரெடி....முடிவுக்கு வந்தது இந்தியன் 2 வழக்கு
சென்னை : 2019 ம் ஆண்டு டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் 2 படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வந்தது. ஷுட்டிங் ஸ்பாட்டில் நடைபெற்ற கிரைன் விபத்தில் தொழிலாளிகள் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் சிறிது நாட்கள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து கொரோனா, லாக்டவுன் போன்ற பல காரணங்களால் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து தள்ளிப் போனது. லாக்டவுன் முடிந்து மீண்டும் படப்பிடிப்புக்கள் நடத்த அரசு அனுமதி அளித்த நிலையில், மீண்டும் இந்தியன் 2 படப்பிடித்தின் படப்பிடிப்புக்கள் எப்போது துவங்கப்படும் என அறிவிக்கப்படாமலேயே இருந்தது.

வழக்கு தொடர்ந்த லைகா
இதனால் ஷங்கர் தனது அடுத்த படங்கள் பற்றிய அறிவிப்புக்களை வெளியிட்டார். தொடர்ந்து அதற்கான முதல் கட்ட வேலைகளையும் துவக்கினார். இதற்கிடையில் இந்தியன் 2 படத்தை முடிக்காமல் மற்ற படங்களை ஷங்கர் இயக்க தடை விதிக்க வேண்டும் என சென்னை மற்றும் ஐதராபாத் ஐகோர்ட்களில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

லைகா மேல்முறையீடு
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து லைகா நிறுவனம் சார்பில் மேல்முறையீடும் செய்யப்பட்டது. இதை எதிர்த்து லைகா சார்பில் தாக்கல் செய்யபட்ட மேல்முறையீட்டு மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

ஷங்கர் பதில் மனு
இதற்கு டைரக்டர் ஷங்கரும், இந்தியன் 2 தாமதத்திற்கு தான் காரணமல்ல எனவும், லைகா நிறுவனம் தான் காரணம் எனவும், உரிய பட்ஜெட் தொகையை அவர்கள் சரியான நேரத்திற்கு ஒதுக்காததே படத்தின் தாமதத்திற்கு காரணம் என பதில் மனு தாக்கல் செய்தார். இரு தரப்பும் மாறி, மாறி குற்றம்சாட்டி மனு தாக்கல் செய்ததால் சமரசம் பேச, பிரச்சனையை தீர்த்து வைக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

கமலின் சமரச முயற்சி
இதற்கிடையில் இரு தரப்பையும் சமாதானம் செய்யும் முயற்சியில் கமல் இறங்கினார். அதைத் தொடர்ந்து லைகா நிறுவன உரிமையாளர் சுபாஸ்கரனும் ஷங்கரை நேரில் அழைத்து பேசியதாக கூறப்பட்டது. இதையடுத்து இருவரும் சுமூகமாக பிரச்சனையை தீர்க்க முடிவு எடுக்கப்பட்டதாக சமீபத்தில் தகவல் பரவியது.

சமரசத்திற்கு தயார்
இந்நிலையில் லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது லைகா நிறுவனம் தரப்பில் இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதியின் மத்தியஸ்த நடைமுறையில் பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டதுடன், அந்த சமயத்தில் ஷங்கர் வேறு படம் இயக்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்த போவதில்லை என உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

வழக்கு முடித்து வைப்பு
அப்போது ஷங்கர் தரப்பில் ஏற்கனவே ஒத்துக்கொண்ட படங்களை முடிக்க அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களை பதிவு செய்த நீதிபதிகள், இயக்குனர் ஷங்கருக்கு எதிராக லைலா நிறுவனம் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். லைகா நிறுவனம் மற்றும் இயக்குனர் ஷங்கர் இடையேயான பிரச்சினைக்கு மத்தியஸ்தம் மூலம் தீர்வு காண இருப்பதாக தெரிவிக்கபட்டதை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், அதுதொடர்பான வழக்கை முடித்துவைத்தது.


Click it and Unblock the Notifications