தனுஷ் VS நயன்தாரா.. வழக்கு ஜனவரி 8ந் தேதிக்கு தள்ளிவைப்பு!
சென்னை: நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் இடைக்கால தடை கோரிய மனு மீதான விசாரணையை ஜனவரி 8ம் தேதிக்கு ஒத்துவைத்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு தொடர்பாக பதிலளிக்கும்படி நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
நடிகை நயன்தாரா தனது திருமண ஆவண படத்தில் நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தயாரித்த நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. அனுமதியின்றி படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என நடிகை நயன்தாராவுக்கு நடிகர் தனுஷ் தரப்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.

நயன்தாரா அதிரடி அறிக்கை: இந்த நோட்டீசுக்கு பதிலளித்து நடிகை நயன்தாரா அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், தனுஷின் இந்த செயல் தனக்கும், தனது கணவருக்கும் மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்துவதாகவும், கீழ்தரமான இந்த செயலால், ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது என்றும், மேலும் தனுஷின் நோட்டிஸை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் எனவும் கூறியிருந்தார். இந்த அறிக்கை தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரையுலகங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
10 கோடி இழப்பீடு: இதையடுத்து, நடிகை நயன்தாராவுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கேட்டு நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கை தாக்கல் செய்ய வொண்டர் பார் நிர்வனத்துக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, அனுமதியின்றி காட்சிகளை பயன்படுத்தியதற்காக 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும், காட்சிகளை பயன்படுத்த தடை கோரியும் வொண்டர்பார் நிறுவனம் தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
பதிலளிக்க உத்தரவு: இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கு தொடர்பாக பதிலளிக்கும்படி, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன், நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். இந்த பதில் மனுக்களுக்கு, தனுஷ் தரப்பிலும் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, வழக்கில் இடைக்கால தடை கோரும் மனு மீது ஜனவரி 8ம் தேதி இறுதி விசாரணை நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











