Simbu - கொரோனா குமாரால் சிம்புவுக்கு வந்த சிக்கல்.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: Simbu (சிம்பு) கொரோனா குமார் படத்தின் விவகாரத்தில் செப்டம்பர் 19ஆம் தேதிக்குள் சிம்பு ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
பன்முக திறமை கொண்ட நடிகர்களில் ஒருவர் சிம்பு. நடிப்பு, இயக்கம், பாடல்கள் பாடுவது, எழுதுவது, நடனம் என எந்த கிரவுண்டில் இறங்கினாலும் ஃப்ரீ ஹிட்டில் விளையாடுபவர் சிக்ஸ் அடிப்பவர். எந்த அளவுக்கு திறமை இருக்கிறதோ அதே அளவு அவரை சுற்றி சர்ச்சைகளும் எழுந்துகொண்டிருந்தன. அவரை சூழ்ந்த பிரச்னை காரணமாக அவரால் சினிமாவில் கவனம் செலுத்த முடியாமல் இருந்தது.

இரண்டாவது இன்னிங்ஸ்: உடல் எடையை குறைத்து தனது எண்ணங்களை ஒருமுகப்படுத்தி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார் சிம்பு. இரண்டாவது இன்னிங்ஸில் ஈஸ்வரன் கைகொடுக்கவில்லை என்றாலும் சிம்புவின் மாநாடுக்கு கூட்டம் அலைமோதியது. அதன் காரணமாக படமும் நூறு கோடி ரூபாயை வசூலித்து மெர்சல் செய்தது. எனவே வின்டேஜ் சிம்பு மீண்டும் வந்துவிட்டார் என எஸ்டிஆர் ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர்.
வெந்து தணிந்தது காடு: அதேபோல் மாநாடுக்கு பிறகு கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்திருந்தார். கிராமத்து இளைஞர், மும்பையில் வேலை பார்க்கும் இளைஞர் என முத்து என்ற கதாபாத்திரத்தில் கலக்கியிருந்தார். அந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்க சிம்புவின் கிராஃப் உச்சத்துக்கு சென்றது.
பத்து தல: இப்படிப்பட்ட சூழலில் மஃப்டி என்ற கன்னட படத்தின் ரீமேக்காக பத்து தல படத்தில் நடித்தார். கன்னடத்தில் மெகா ஹிட்டடித்தாலும் தமிழில் சொதப்பியது. இருப்பினும் சிம்புவின் நடிப்பு பாராட்டப்பட்டது. ஆனால் ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்த சிம்புவுக்கு பத்து தல சின்ன சறுக்கலாகவே பார்க்கப்படுகிறது. இந்த சறுக்கலை அடுத்தப் படத்தில் சரி செய்துவிடுவார் என நம்பலாம். சிம்புவின் அடுத்த படத்தை கமல் ஹாசன் தயாரிக்கிறார். தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார்.
சிக்கலில் சிம்பு: இதற்கிடையே வெந்து தணிந்தது காடு 2 படத்துக்காக வேல்ஸ் நிறுவனத்திடம் போடப்பட்ட ஒப்பந்தத்தை சிம்பு மீறிவிட்டார் என புதிய சர்ச்சை எழுந்திருக்கிறது. இதனால் கமல் - சிம்பு - தேசிங்கு படத்துக்கு சிக்கல் வருமோ என எஸ்டிஆர் ரசிகர்கள் அஞ்சினர். ஆனால் தற்போது புதிய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது.
என்ன சிக்கல்?: அதாவது இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இயக்குநர் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் படத்தில் நடிக்க கமிட்டாகியிருந்தார் சிம்பு. ஆனால் அந்தப் படம் குறித்த எந்தப் பேச்சும் இதுவரை எழவில்லை. அந்தப் படத்தையும் வேல்ஸ் நிறுவனமே தயாரிப்பதாக இருந்தது. அதற்கு சிம்புவுக்கு 9 கோடி ரூபாய்வரை சம்பளம் பேசப்பட்டு 4 கோடி ரூபாய்வரை பணம் அவருக்கு கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.
ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட சிம்புவோ கொரோனா குமார் படத்தை தவிர்த்து மற்ற படங்களில் நடித்துவருகிறார் எனவும் அவருக்கு பணம் கொடுத்ததற்கான ஆவணங்கள் அனைத்தும் தங்களிடம் இருப்பதாகவும் வேல்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் செப்டம்பர் 19ஆம் தேதிக்குள் ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை சிம்பு அளிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் மற்ற படங்களில் நடிக்க தடை விதிக்கப்படும் என அதிரடி உத்தரவிட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











