குண்டர் சட்டம் நீக்கம்...பப்ஜி மதனுக்கு ஜாமீன் கிடைக்குமா? அரசு பதிலளிக்க நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை : குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதால் ஜாமீன் கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்துள்ள மனு குறித்து சென்னை காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதன் மற்றும் டாக்சிக் மதன் 18 பிளஸ் என்ற யூடியூப் சேனல்கள் மூலமாக பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடியதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பப்ஜி மதன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கடந்த ஜூன் 18 ஆம் தேதி தர்மபுரியில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஏராளமான புகார்கள் வந்ததால், அவரை சைபர் சட்ட குற்றவாளி எனக் கூறி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர், ஜூலை 5-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.இதையடுத்து ,கடந்த வாரம் பப்ஜி மதன், குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, ஜாமீன் கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நேற்று முன் தினம் தள்ளுபடி செயதது. இதையடுத்து ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பப்ஜி மதன் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மதன் தரப்பில் கடந்த 10 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், தன் மீதான குண்டர் சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்து விட்டதால், ஜாமீன் வழங்க வேண்டுமென வாதிடப்பட்டது. இதையடுத்து மதனின் ஜாமீன் மனு குறித்து சைபர் கிரைம் பிரிவு காவல்துறை 10 நாட்களில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











