திரையரங்குகளில் 100% இருக்கை அனுமதியை எதிர்த்த வழக்கு... தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்
சென்னை : திரையரங்குகளில் 100 சதவிகித பார்வையாளர்களை கடந்த நவம்பர் 1ம் தேதி முதல் அனுமதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை தள்ளுபடி செய்து தற்போது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திரையரங்குகளில் 100% இருக்கை பயன்பாடு
கடந்த நவம்பர் 1ம் தேதி முதல் திரையங்குகளில் 100 சதவிகித இருக்கைகளை பயன்படுத்த அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதுகுறித்த அறிவிப்பு கடந்த மாதம் 23ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது திரையரங்குகளில் அண்ணாத்த, எனிமி உள்ளிட்ட படங்கள் வெற்றிகரமாக அதிகமான ரசிகர்களுடன் ஓடி வருகிறது.

பொதுநல வழக்கு
இந்நிலையில் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உடன்குடியை சேர்ந்த சிவமுருகன் ஆதித்தன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதன்மூலம் கொரோனா தொற்று பரவும் அபாயம் அதிகரிக்கும் என்று அவர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

வழக்கு தள்ளுபடி
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி பிடி ஆதிகேசவலு தலைமையிலான அமர்வு, இந்த வாதத்தை ஏற்க மறுத்துள்ளது. நிபுணர்களின் ஆலோசனையின்படி அனைத்து அம்சங்களையும் பரிசீலித்த பிறகே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தலையிட முடியாது என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

நீதிபதிகள் விளக்கம்
இந்த விஷயத்தில் தமிழக அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பண்டிகை காலங்களிலும் கொரோனா தாக்கம் அபாய அளவை தாண்டவில்லை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். எந்த ஆதாரமும் இல்லாமல் இத்தகைய வழக்குகளை தாக்கல் செய்யக்கூடாது என்று மனுதாரருக்கும் வலியுறுத்தியுள்ளனர்.

தீபாவளி கொண்டாட்டம்
மேலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அடிப்படையில் தற்போதைய தமிழக சூழலை மாநில அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை மக்கள் அனைவரும் கொரோனா அச்சத்தால் சரியாக கொண்டாடவில்லை.

புதுப்படங்களுடன் தீபாவளி கொண்டாட்டம்
இந்த ஆண்டு கொரோனா சிறிது மட்டுப்பட்ட நிலையில், தீபாவளி பண்டிகையை இனிப்பு, பலகாரங்களுடனும் புதுப்படங்களுடனும் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். முதல் 4 நாட்களில் விடுமுறையையொட்டி திரையரங்குகளில் ரசிகர்கள் அலைமோதினர். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை கவனம் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











