கமலை வைத்து தேவர்மகன் 2.. விஜய் சேதுபதி படம்.. பிக் பாஸ் வீடு.. முதன்முறையாக சேரன் ஓப்பன்டாக்!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடப்பதெல்லாம் உண்மையான சம்பவங்கள் தான் என இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: கமலை வைத்து தேவர்மகன் 2 படத்தை இயக்க தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார் இயக்குநர் சேரன்.
ஆட்டோகிராப், வெற்றிக்கொடி கட்டு, பொற்காலம் என தமிழில் வெற்றிப் படங்கள் கொடுத்தவர் இயக்குநர் சேரன். இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் தன் திறமையை நிரூபித்தவர்.
இவர் பிக் பாஸ் சீசன் 3யில் போட்டியாளராக கலந்து கொண்டது மக்களை பெரிதும் ஆச்சர்யப்படுத்தியது. அவர் இம்முறை டைட்டில் வின்னர் ஆவார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால், கடந்த வாரத்திற்கு முந்தைய வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் சேரன்.

வெல்கம் பேக் சேரன்
இந்நிலையில் சென்னை வடபழனி கமலா திரையரங்கில் நடைபெற்ற ‘வெல்கம் பேக் சேரன்' என்ற நிகழ்வில் கலந்து கொண்டார் சேரன். அதில், கமலா திரையரங்கம் சார்பில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசினார் அவர்.

பிக் பாஸ்
அப்போது, "பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் பங்குபெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரையும் பற்றியும் நன்றாக தெரியும். நான் இயக்குநர் என்பதை தாண்டி ஒரு நல்ல மனிதன் என்பதை மக்களுக்கு புரிய வைத்துவிட்டேன்

விஜய் சேதுபதி படம்
நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போக காரணம் நடிகர் விஜய்சேதுபதி தான். அவரை வைத்து விரைவில் படம் இயக்க உள்ளேன். என்னிடம் ஒருநாள் போனில் பேசிய அவர், ‘நீங்கள் வெற்றி இயக்குநர் என்பது இப்பொழுது இருக்கும் இளம் தலைமுறைகளுக்கு தெரியாது. அவர்கள் மனதில் எல்லாம் இடம் பிடிக்க வேண்டும்.

ஆலோசனை
எல்லோர் இல்லத்திலும் சேரன் எளிதாக நுழைய வேண்டும். அதற்கு நீங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற வேண்டும்' என்றார். அவர் ஆலோசனையின் படி தான் நான் பிக்பாஸ் நிகழ்ச்சில் பங்கு பெற்றேன். கூடிய விரையில் விஜய்சேதுபதியை வைத்து படம் இயக்குவேன்" என சேரன் தெரிவித்தார்.

தேவர் மகன் 2
அதனைத் தொடர்ந்து கமலை வைத்து தேவர் மகன் 2 படத்தை இயக்குவது தொடர்பான கேள்விக்கு, "பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது கமலை வைத்து தேவர் மகன் 2 படத்தை இயக்க வேண்டுமென விரும்பினேன். அதற்கான கதையும் என்னிடம் உள்ளது. கமல் சம்மதித்தால் தேவர் மகன் இரண்டாம் பாகம் எடுப்பேன். இதை கமல்ஹாசனிடமும் தெரிவித்துவிட்டேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











