பரம எதிரி திமுக கூட்டணி கட்சிகளுடன் இணைவது சரியா? விஜய்க்கு சேரன் கேள்வி!
சென்னை: 108 தொகுதிகளில் வெற்றிபெற்ற தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் கூட்டணி ஆதரவு அளித்த நிலையில் தவெகவுக்கு 112 இடங்கள் கிடைத்தது. அதைத்தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் சேர்த்து தவெகவுக்கு 116 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்துள்ளது. ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 2 இடங்கள் தேவைப்படுகிறது. நேற்று மூன்றாவது முறையாக ஆளுநரை சந்தித்தும் ஆளுநர் அவரை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை.
ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம்: அதே நேரம் தவெகவை ஆட்சியமைக்க அழைக்காத ஆளுநர் ஆர்.வி.அர்லேகரை பலரும் கண்டித்து வருகின்றனர். எம்.எல்.ஏக்களின் ஆதரவை நிரூபிக்க வேண்டியது சட்டப்பேரவை தான். ஆளுநரிடம் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்ற கருத்து எழுந்துள்ளது. தவெக ஆட்சியமைப்பதை விரும்பாத, பாஜக செய்யும் சதி என அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்காத ஆளுநரை கண்டித்து, தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இயக்குநர் சேகரன்: இந்நிலையில், இயக்குநரும் நடிகருமான சேரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,108 தொகுதிகளில் தனியாக மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்ற தவெக அவர்களிம் பரம எதிரியாக தேர்தல் களத்தில் சொல்லப்பட்ட திமுகவின் கூட்டணி கட்சியை இணைத்துக்கொள்வது சரியா? காங்கிரஸ் 5 தொகுதிகளில் வெல்ல திமுகவின் ஓட்டுதானே முக்கிய காரணம் என்ற கேள்வி வருகிறதே... அப்படியானால் திமுக எம்.எல்.ஏ.க்கள் கட்சித்தாவலில் வந்தால் கூட இணைத்துக்கொள்ள முடியுமா?
விஜய்க்கு கேள்வி: மக்களின் ஓட்டு அந்த திமுக எதிர்ப்பை வைத்ததால்தானே விஜய்க்கு கிடைத்தது என்பதை ஏன் யாரும் யோசிக்கவில்லை. அது எங்கோ சறுக்கலாக தெரிகிறதே... ஒன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 108 எம்.எல்.ஏ க்களுடன் ஆட்சி அமைக்க அனுமதி கொடுப்பது.. இல்லையேல் மறுதேர்தல் நடத்த முடிவெடுத்தால் அதை எதிர்கொள்வது... இதுதானே சரியான நிலைப்பாடாக இருக்க முடியும்... கூட்டணிக்கு வர மறுத்த கட்சிகளை இப்போது இணைத்துக்கொள்வது மக்களின் அங்கீகாரத்தை முடிவை அவமதிப்பது போல் ஆகும் அல்லவா


Click it and Unblock the Notifications