ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை - பேஸ்புக் வடிவில் சேரன் வைத்த அழைப்பு
சென்னை: தான் புதிதாக இயக்கி தயாரித்துள்ள ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கைப் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழை பேஸ்புக் டிசைனில் வடிவமைத்து அனுப்பியுள்ளார் இயக்குநர் சேரன்.
பொக்கிஷம் படத்துக்குப் பிறகு சேரன் எழுதி இயக்கி தயாரித்துள்ள படம் ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை.

நடிக்கவில்லை
இந்தப் படத்தில் அவர் நடிக்கவில்லை. தெலுங்கு நடிகரும் எங்கேயும் எப்போதும் தமிழ்ப் படத்தில் நடித்தவருமான சர்வானந்த் நாயகனாகவும், நித்யாமேனன் நாயகியாகவும் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் முதல் முறையாக சேரனுடன் கைகோர்த்துள்ளார். சந்தானம், மனோபாலா போன்றவர்களும் இந்தப் படத்தில் உள்ளனர்.

இசை வெளியீட்டு விழா
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை ஞாயிற்றுக்கிழமை சென்னை சத்யம் திரையரங்கில் நடக்கிறது. திரையுலக ஜாம்பவான்கள் பாலச்சந்தர், பாரதிராஜா, பாலு மகேந்திரா, மகேந்திரன் போன்றவர்கள் பங்கேற்று இசைத் தட்டை வெளியிடுகின்றனர்.

பேஸ்புக் பக்க வடிவில்...
இந்தப் படத்துக்கான இசைவெளியீட்டு விழா டிசைனை புதுமையாக பேஸ்புக் பக்கத்தின் வடிவில் அமைத்திருக்கிறார் சேரன்.

ட்ரீம் ஆடியோ
மேலும் தனது புதிய ஆடியோ நிறுவனமான ட்ரீம் ஆடியோ குறித்தும் இதில் அறிவித்துள்ளார் சேரன். தனது ட்ரீம் ஒர்க் தயாரிப்பு நிறுவனம் போலவே ட்ரீம் ஆடியோவும் தரமான இசையை வழங்கும் என குறிப்பிட்டுள்ளார்.

ஷங்கர் - சூர்யா
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் ஷங்கரும் நடிகர் சூர்யாவும் பங்கேற்கிறார்கள். கேயார் உள்ளிட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர்.

சேரனின் நண்பர்கள்..
சேரனின் நண்பர்களும் சக இயக்குநர்களுமான வசந்த், பார்த்திபன், கரு பழனியப்பன், அமீர், சமுத்திரக்கனி, முருகதாஸ், லிங்குசாமி, ஜனநாதன், கவுதம் மேனன், ராம், வெற்றிமாறன் என பெரும் பட்டாளமே நாளை இந்த நிகழ்ச்சிக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications











