TVK Vijay: வெள்ளி நாணயம் கொடுத்து என்ன பயன்? விஜய்க்கு செய்யாறு பாலு சொல்லும் அரசியல் டிப்ஸ்!
சென்னை: நடிகர் விஜய் அரசியலில் காலடி எடுத்து வைத்து இன்னும் ஒரு வார காலத்திற்குள் ஒரு ஆண்டு நிறைவு பெறவுள்ளது. இப்படியான நிலையில் பலரும் அவர் மீது பல்வேறு விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். குறிப்பாக களத்திற்கு வருவதில்லை எனும் விமர்சனமும் குற்றச்சாட்டும் விஜய் மீது வைக்கப்படும் மிகவும் முக்கியமானதாக உள்ளது. இப்படியான நிலையில் தனது கட்சியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்த மாவட்ட நிர்வாகிகளை இன்று சந்தித்தார். அப்போது நிர்வாகிகளுக்கு வெள்ளி நாணயம் வழங்கினார். இது தொடர்பாக சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி தனது அரசியல் கட்சியைத் தொடங்கினார். தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது கட்சியைத் தொடங்கிய விஜய், சினிமாவில் இருந்து விலகப்போவதாகவும், முழுநேர அரசியலில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்தார். இப்படியான நிலையில் இனி முழுநேரமும் களப்பணிகளைச் செய்ய, திட்டமிட்டுள்ளார். இதற்கான தனது கட்சியின் நிர்வாக நலனுக்காக தமிழ்நாட்டினை மொத்தம் 120 மாவட்டங்களாகப் பிரித்து நிர்வாகிகளை நியமித்துள்ளார். மேலும் தனது நிர்வாகிகளுக்கு வெள்ளி நாணயமும் வழங்கி ஊக்கப்படுத்தியுள்ளார்.

வெள்ளி நாணயம்: அந்த வெள்ளி நாணயத்தில் ஒரு பக்கம் விஜய்யின் முகமும், மறு பக்கம், கட்சியின் பெயரும், பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் என திருக்குறளும் எழுதியுள்ளது. அதேபோல், கட்சியின் கொடியில் உள்ள இரண்டு போர் யானைகள், வாகை மலரும் பொறிக்கப்பட்டுள்ளது. விஜய்யிடம் இருந்து வெள்ளி நாணயத்தை பெற்ற நிர்வாகிகள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். இந்நிலையில் சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு, விஜய்யின் இந்த நடவடிக்கை குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பேசியுள்ளார்.

டிப்ஸ்: அதாவது இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், " விஜய் உங்க கட்சிக்குள்ளேயே அதிகப்படியான குளறுபடிகள் உள்ளது. ஏன் இப்படி?, அதேபோல் கட்சி நிர்வாகிகளால் விஜய்யைச் சந்தித்துப் பேச முடியவில்லை. நிர்வாகிகளாலேயே விஜய்யை நேரில் சந்திக்க முடியவில்லை என நிர்வாகிகளும் தொண்டர்களும் புலம்பிக் கொண்டு உள்ளார்கள். இதற்கு இடையூறாக புஸ்ஸி ஆனந்த் உள்ளார் என நிர்வாகிகள் புலம்பி வருகின்றார்கள். விக்கிரவாண்டி மாநாட்டில் கூட, கேரவனில் இருந்து மேடைக்கு வந்தார். பேசிய பின்னர் கேரவனுக்கு போய்விட்டார். மாநாட்டிற்காக உழைத்தவர்களுக்கு நன்றி கூட சொல்லவில்லை.

ரகசியம்: பணம் கொடுத்தால் கட்சியில் பொறுப்பு என்ற புகைச்சல் பல நாட்களாக இருந்து கொண்டு உள்ளது. இதற்கெல்லாம் விஜய்யால்தான் முடிவு கட்ட முடியும். உட்கட்சி விவகாரங்கள் குறித்த ஆடியோக்களும் வீடியோக்களும் வெளிவந்து கொண்டே உள்ளது. இது தொடர்பாக தவெக தரப்பில் இருந்து, பரவும் ஆடியோக்களும் வீடியோக்களும் உண்மை அல்லது பொய் என எதுவுமே கூறவில்லை. விஜய்யிடம் ரகசியமாக பேசுவது கூட வெளியே கசிகின்றது. இது தலைவராக அவர் மீது பெரும் அதிருப்தியை நிர்வாகிகளுக்கு ஏற்படுத்தியுள்ளது" என பேசியுள்ளார். இவரது இந்தப் பேச்சு பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. மேலும் பலர் விஜய் தன்மீது வைக்கப்படும் விமர்சனங்களைக் கவனித்து அவற்றிக்கு சரியான விளக்கங்களை வழங்கவேண்டும், நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











