அன்னபூரணி படத்திற்காக நயன்தாராவுக்கு விருதா.. விருதுகள் மேல நம்பிக்கையே போச்சு.. செய்யாறு பாலு வேதனை
சென்னை: சினிமாவின் உயரிய விருதுகளாக கருதப்படும் சைமா விருதுகள், 2024ம் ஆண்டிற்கான விருதுகளை வழங்கியுள்ளன. சிறந்த நடிகருக்கான விருதுகளை சிவகார்த்திகேயன் மற்றும் விக்ரம் பெற்றுள்ளனர். சிறந்த நடிகைக்காக விருதை நடிகை நயன்தாரா பெற்றுள்ளார். தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து அவர் இந்த விருதை பெற்றுள்ளார்.
கடந்த 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் இந்த விருது வழங்கும் விழா துபாயில் நடந்துள்ளது. இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி பிரபலங்கள் இணைந்திருந்தனர். தமிழில் கடந்த ஆண்டில் வெளியான ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் சிறந்த திரைப்படம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் விருதுகளை குவித்துள்ளது.

சைமா விருதுகள் 2024: ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் சைமா விருது சினிமாவில் உயரிய விருதாக இருந்து வருகிறது. இந்த ஆண்டிற்கான சைமா விருதுகள் வழங்கும் விழா கடந்த செப்டம்பர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் துபாயில் நடைபெற்றது. இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழியின் திரைப்பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். இந்த ஆண்டிற்கான விருதுகளில் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் சிறந்த படம், சிறந்த இயக்குநர் உள்ளிட்ட பிரிவுகளில் 5 விருதுகளை வென்றுள்ளது. சிறந்த நடிகர்களாக சிவகார்த்திகேயன் மற்றும் விக்ரம் தேர்வாகியிருந்தனர். சிறந்த நடிகைக்கான விருது அன்னபூரணி படத்திற்காக நயன்தாராவிற்கு வழங்கப்பட்டது.
சிறந்த நடிகை நயன்தாரா: இந்த விருதினை நயன்தாரா தன்னுடைய கணவரும் பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவனுடன் இணைந்து பெற்றுக் கொண்டார். ரத்தமாரே பாடலை எழுதியதற்காக விக்னேஷ் சிவனுக்கும் சிறந்த பாடலாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே அன்னபூரணி படத்திற்காக நயன்தாராவிற்கு விருதா என பத்திரிகையாளர் செய்யாறு பாலு கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக வீடு படத்திற்காக சொக்கலிங்க பாகவதர் சிறந்த நடிகருக்கான விருதை பெற்ற நிலையில், படத்தின் அசோசியேட் இயக்குநர் பாலாவிடம் இருந்து பேருந்து செலவிற்காக 10 ரூபாய் பெற்று சென்றதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
விருது அரசியல்: அந்த அளவிற்கு டெடிகேஷனுடன் பணத்தை எதிர்பார்க்காமல் இவர்கள் நடித்ததை சுட்டிக்காட்டியுள்ள செய்யாறு பாலு, தற்போது விருதுக்கு பின்னாள் சில அரசியலும் அதிகமான விவகாரங்களும் உள்ளதையும் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக விருது வழங்கும் விழா ஒன்றில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தையும் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகள் வராததால் தான் மற்றும் வேறு சிலருக்கு விருது அறிவிக்கப்பட்டதும், தான் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓடிவந்ததையும் குறிப்பிட்ட அவர், அதன்பின்பு விருது வழங்குகிறேன் என்று யாராவது சொன்னால் தனக்கு கைகால்கள் நடுங்க ஆரம்பித்துவிடும் என்றும் கூறியுள்ளார்.
செய்யாறு பாலு கேள்வி: இதனிடையே, முன்னதாக சைமா விருதுகள் பட்டியலை தான் பார்த்தபோது ஆச்சர்யமும் அதிர்ச்சியும் ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். உலகளவில் குறிப்பாக தென்னிந்திய அளவில் மிகப்பெரிய விருதாக கருதப்படும் சைமா விருதுகளில் லியோ படத்திற்காக அர்ஜுனுக்கு விருது வழங்கப்பட்டதை சுட்டிக் காட்டியுள்ள செய்யாறு பாலு, ஏன் சஞ்சய் தத்திற்கு விருது வழங்கப்படவில்லை அவர் குறைவாக நடித்தாரா, இதேபோல ஜெயிலர் படத்தில் ஏன் ரஜினிகாந்திற்கு விருது வழங்காமல் வசந்த் ரவிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது போன்ற கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அன்னபூரணிக்காக நயன்தாராவிற்கு விருதா?: இதனிடையே அன்னபூரணி படத்திற்காக நயன்தாராவிற்கு விருது வழங்கப்பட்டுள்ளது குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நயன்தாரா சிறந்த நடிகை என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்று கூறியுள்ள செய்யாறு பாலு, ஆனால் அன்னபூரணி படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார். அந்தப் படம் எந்தளவிற்கு மக்களை சென்று சேர்ந்தது, எவ்வளவு வசூல் செய்தது என்றும் கேட்டுள்ளார். சர்ச்சைகளை மட்டுமே நம்பி இந்தப் படத்தை ஓட்டிவிடலாம் என்ற தயாரிப்பு தரப்பின் கணிப்பு 2 நாட்களிலேயே பொய்த்ததையும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஓடிடியிலும் படம் யாரையும் கவறாத நிலையில், இநதப் படத்திற்காக நயன்தாராவிற்கு விருது வழங்கப்பட்டடுள்ளதை சுட்டிக் காட்டியுள்ள செய்யாறு பாலு, விருதுகள் மீதான நம்பிக்கையே பொய்த்து விட்டதாக தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











