கில்லி படத்தில் வரும் விஜய்யின் வீடு எங்க இருக்கு தெரியுமா? செய்யாறு பாலு சொன்ன சுவாரசியத் தகவல்!
சென்னை: தளபதி விஜய் நடித்த கில்லி திரைப்படம் தமிழகம் முழுவதும் இன்று ரீ ரிலீஸ் ஆகி உள்ளது. படம் வெளியாகி 20 ஆண்டுகளுக்கு பிறகும் இன்றைய 2கே கிட்ஸ்கள் படத்தை ஆட்டம், பாட்டத்துடன் அலப்பறை செய்து படத்தை பார்த்து வருகின்றனர். இத்திரைப்படத்தில் வரும் விஜய்யின் வீடு குறித்து செய்யாறு பாலு ஒரு சுவாரசியமானத் தகவலை பகிர்ந்துள்ளார்.
2014ம் ஆண்டு இயக்குனர் தரணி இயக்கத்தில், விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி, ஜானகி சுபாஷ், ஜெனிபர், தாமு, மயில் சாமி, நாகேந்திர பிரசாத், பொன்னம்பலம், பாண்டு, வினோத் ராஜ் என ஏராளமானோர் நடித்த திரைப்படம் கில்லி. இத்திரைப்படம் தியேட்டரில் பல நாட்கள் ஓடி வசூலை அள்ளியது. இந்த திரைப்படம் விஜய்யின் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான திரைப்படம் ஆகும்.

கில்லி கதை: கபடி, காதல், ஆக்ஷன் என கில்லி படம் முழுக்க சொல்லி அடித்து இருப்பார் விஜய். அப்பாவுக்குத் தெரியாமல் கபடி விளையாட தனது நண்பர்களுடன் மதுரைக்கு செல்கிறார். அங்கு மந்திரியின் மகன் பிரகாஷ்ராஜ், தன் வயதில் பாதியே இருக்கும் த்ரிஷாவை விரட்டி மிரட்டி செல்லம் ஐ லவ் யூ என சொல்லிக்கொண்டு அவளை துரத்தி காதலிக்கிறான். தன் திருமணத்திற்கு தடையாக இருந்த த்ரிஷாவின் இரண்டு அண்ணன்களையும் கொன்றுவிடுகிறாள்.
மாஸ் கதை : இதனால், திருமணத்தில் இருந்து தப்பிக்க வீட்டை விட்டு ஓடுகிற த்ரிஷா, மீண்டும் முத்துப்பாண்டி கையில் சிக்கிக்கொள்ள, தற்செயலாக அந்தப் பக்கம் வருகிற விஜய், தடுத்துக் காப்பாற்றி சென்னைக்கு அழைத்து வருகிறார். இதனால், பிரகாஷ்ராஜ் த்ரிஷாவையும், விஜய்யும் தேடி அலைந்து கொண்டு இருக்க. விஜய், த்ரிஷாவை எப்படி காப்பாற்றினார் என்பது தான் கில்லி திரைப்படத்தின் கதை. இப்படம் வெளியாகி 20 வருடங்களுக்கு மேலான போதும், இப்படத்தை பல முறையில் தொலைக்காட்சியில் பார்த்த போதும், இந்த படத்தின் மீது கொஞ்சம் கூட சலிப்பு ஏற்பட்டது இல்லை.

ரீ ரிலீஸ்: இன்று தியேட்டரில் ரீ ரிலீஸ் ஆகி உள்ள கில்லி படத்தை இன்றைய இளம் தலைமுறையினர் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் பட்டாசுகள் வெடித்து திரைப்படத்தை வரவேற்றனர். இந்த படம் வெளியான போது நான் பிறக்கவில்லை, இந்த படத்தை டிவியில் தான் பார்த்தேன், இப்போது இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் என்றனர்.
செய்யாறு பாலு : இந்நிலையில், கில்லி படம் ரீ ரிலீஸ் ஆகி உள்ளது குறித்து மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு, இயக்குநர் தரணி தில், தூள் என்ற இரண்டு வெற்றிப்படத்தை தொடர்ந்து கில்லி படத்தை இயக்கினார். ஆனால், இந்த படங்களுக்கு முன் தரணி எதிரும் புதிரும் என்ற படத்தை முன் முதலில் இயக்கினார். அந்த படம் மிகப்பெரிய தோல்வித் திரைப்படமாக அமைந்ததை அடுத்து தனது பெயரை தரணி என்று மாற்றிக்கொண்டார். கில்லி படத்திற்கு பிறகு தரணி டாப் இயக்குநராகிவிட்டார். கில்லி படத்தை இயக்குவதற்கு சரியான நபர் தரணி தான் என்று ஏ.எம். ரத்னம் விடாப்பிடியாக இருந்து தரணியை இந்த படத்தின் இயக்குநர் ஆக்கினார். அவர் நினைத்தது போல இந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

கில்லி வீடு: இந்த படத்திற்கு ஆரம்பத்தில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லை, இந்த படத்தில் விஜய்யின் வீடு முக்கியமானதாக இருக்கும் அதாவது, த்ரிஷாவை காப்பாற்றி அழைத்து வரும் விஜய் தனது வீட்டின் மாடி வழியாக வந்து வீட்டுக்கு வருவார், எதிரில் லைட் ஹவுஸ் கூட இருக்கும். இதைப்பார்த்த பலர் இந்த வீடு எங்க இருக்கு என்று கேட்டுவந்தார்கள். உண்மையில் அப்படி ஒரு வீடு இல்லவே இல்லை. அது படத்திற்காக போடப்பட்ட செட், இந்த கதைக்கு அந்த வீடு ரொம்ப முக்கியம் என்பதால், வீடு போல மகாபலிபுரத்தில் தத்துரூபமாக செட் போடப்பட்டது. அப்போது இந்த செட்டை பார்க்க பத்திரிக்கையாளர்கள் அழைக்கப்பட்டு இருந்தார்கள். செட்டை பார்த்து அனைவரும் மிரண்டு விட்டோம். செட் என்று தெரியாத அளவிற்கு இருந்தது. இது தான் இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ் என்று செய்யாறு பாலு அந்த பேட்டியில் கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











