அண்டா அண்டாவாக சுட சுட பிரியாணி… தொண்டர்களுக்கு பிறந்த நாள் விருந்து வைத்த கேப்டன்!
சென்னை : கேப்டன் விஜயகாந்தின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு தேமுதிக கட்சி அலுவலகத்தில் இன்று தொண்டர்களுக்கு பிரியாணி விருந்து பரிமாறப்பட்டது.
தமிழ் சினிமாவில் கேப்டன் விஜயகாந்தை கொண்டாடதவர்களே இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு ரசிகர்களின் மனதில் மட்டுமில்லாமல் நடிகர்கள் மனதிலும் இவருக்கு என்று தனி இடம் உண்டு.

10வது படித்துவிட்டு, அப்பாவின் அரசி மண்டியை கவனித்துக்கொண்டிருந்த விஜயகாந்திற்கு 17 வயதில் இருந்தே, உதவிசெய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராகவே இருந்துள்ளார்.
அப்பாவின் அரவணைப்பில்: குழந்தையாக இருக்கும் போதே தாயை இழந்த விஜயகாந்த், அப்பாவின் அரவணைப்பில் வளர்ந்தார். சினிமா மீது இருந்த ஆர்வத்தால், சிறுவயது நண்பர் ராவுத்தருடன் சென்னை வந்தார். ராவுத்தர் கதாசிரியராகவும், விஜயகாந்த நடிகராகவும் சினிமா வாய்ப்பைத் தேடி சென்னை வந்தனர். விஜயகாந்திற்கு படவாய்ப்பு கிடைத்து நடிக்க துவங்கியதும் அவர் நடிக்கும் படங்களை முடிவு செய்து வந்தார் ராவுத்தர்
நண்பன் கொடுத்த மோதிரம்: விஜயகாந்த்துக்காக பலரிடமும் போய் நடிக்க வாய்ப்பு கேட்டு அவரின் வளர்ச்சியை பார்த்து பார்த்து மகிழ்ந்தவர் ராவுத்தர். இவர்களது நட்பை பார்த்து திரையுலமே ஆச்சரியப்படும் அளவுக்கு இருந்தது. ரவுத்தர் பரிசாக கொடுத்த 786 என்கிற மோதிரத்தை விஜயகாந்த் தற்போது வரை அணிந்து இருக்கிறார்.
பசி தீர்த்த வள்ளல்: தனது உழைப்பால் உயர்ந்த விஜயகாந்த், தனது ரசிகர்களை மிகவும் மதித்தார். படப்பிடிப்பு முடித்துவிட்டு எவ்வளவு நேரம் ஆனாலும், தனது ரசிகர்களிடம் முகம் சுளிக்காமல் புகைப்படம் எடுத்துக்கொள்வார். அதே போல எந்த இடத்தில் படப்பிடிப்பு நடந்தாலும், அங்கு வேலை செய்யும் அத்தனை பேருக்கும் வயிறு முட்ட சோறு போட்டு அழகுப் பார்த்தவர் விஜயகாந்த். விஜயகாந்த் ஷூட்டிங்கா நல்லா சாப்பிடலாம் என்று சொன்ன காலம் உண்டு.
கட்சித் தொடங்கினார்: பசி என்று வந்தவர்களின் பசியை தீர்த்துவைத்த விஜயகாந்த் 2005ம் ஆண்டு தேமுதிக கட்சியைத் தொடங்கி, 2006 தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் வெற்றிபெற்ற அவர், 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து வென்று எதிர்க்கட்சித் தலைவரானார். 2014ம் ஆண்டுக்கு பிறகு உடல் நலம் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் அரசியலில் இருந்து ஒதுங்கினார்.

வீட்டிலேயே ஓய்வு: வெளிநாட்டுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்த போதும், எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. உடல் உபாதைகள் காரணமாக வீட்டில் இருந்தபடி ஓய்வெடுத்து வருகிறார். இன்று அவருக்கு 71 வது பிறந்த நாள் என்பதால், தேமுதிக அலுவலகத்தில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ரசிகர்களை சந்தித்தார். கேப்டனைப் பார்த்த மகிழ்ச்சியில் தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.
சுடசுட பிரியாணி: யாரும் பசியோடு இருக்கக்கூடாது என்று பசி அறிந்து சோறு போட்ட கேப்டன், தனது பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்ல வந்த தொண்டர்களுக்கு சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி ஆவிபறக்க சுடசுட பரிமாறப்பட்டது. விருந்தை ஒருபுடி புடித்த தொண்டர்கள் கேப்டன் கேப்டன் தான் என்றும், இந்த மனசு யாருக்கு வரும் என்று மனதார வாழ்த்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











