இசைஞானி இளையராஜாவுக்கு அரசு சார்பில் பாராட்டு விழா.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: இசைஞானி என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இளையராஜா. இதுவரை 1000 படங்களுக்கும் மேல் இசையமைத்திருக்கும் அவர் சமீபத்தில்தான் வேலியன்ட் என்கிற பெயரில் சிம்பொனியை அரங்கேற்றி முடித்தார். இந்தியாவிலிருந்து முதன்முறையாக சிம்பொனி அரங்கேற்றியிருக்கிறார் என்றால் அவர் இளையராஜாதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமமான பண்ணைபுரத்திலிருந்து இசை கனவோடு சென்னைக்கு வந்தவர் இளையராஜா. தன்ராஜ் மாஸ்டரிடம் உதவியாளராக இருந்துவிட்டு அன்னகிளி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்தப் படத்தின் பாடல்கள் அனைத்துமே பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டடித்தன. இதன் காரணமாக முதல் படத்திலேயே தமிழ்நாடு முழுவதும் ஃபேமஸ் ஆகிவிட்டார் ராஜா. அதனைத் தொடர்ந்து அவர் போட்ட மெட்டுக்கள் எல்லாம் ஹிட்டாகின.
ராஜா இல்லாமல் எதுவும் இல்லை: ஒருகட்டத்தில் இளையராஜா இல்லாமல் ஒரு தமிழ் திரைப்படமும் இல்லை என்கிற நிலைமை உருவானது. அவரும் ஒவ்வொரு படத்துக்கும் தன்னுடைய இசையில் புதுமையை புகுத்திக்கொண்டே சென்றார். முக்கியமாக பெரிய ஹீரோ, சின்ன ஹீரோ, பெரிய பட்ஜெட், சின்ன பட்ஜெட் என்கிற பாகுபாடெல்லாம் அவர் பார்ப்பதில்லை. மாறாக தன்னை பொறுத்தவரை தனது இசை அனைவருக்கும் சமம்தான் என்பதை மனதில் வைத்து தான் இசையமைத்த அத்தனை படங்களுக்கும் மிகச்சிறந்த பாடல்களையும் பின்னணி இசையையும் கொடுத்தார் அவர்.

சம்பளமே வாங்காமல்: அதேபோல் பல புதுமுக இயக்குநர்களின் படங்களுக்கு இளையராஜா சம்பளமே வாங்காமல் இசையமைத்திருக்கிறார். அதனை அவர்களும் நன்றியோடு இன்றுவரை நினைவுகூர்ந்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி அடையாளமே இல்லாத படங்களுக்கெல்லாம் இளையராஜாவின் இசைதான் அடையாளம் கொடுத்திருக்கின்றன. மேலும் அவரது பாடல்களால் மட்டுமே பல திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த வரலாறும் கோடம்பாக்கத்தில் உண்டு என்பதை யாராலும் மறக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது.
விமர்சன ராஜா: அதேசமயம் இளையராஜாவை ஒருதரப்பினர் கடுமையாக விமர்சனம் செய்வார்கள். அதாவது அவர் தலைக்கனம் பிடித்தவர்; யாரையும் மதிக்கமாட்டார் என்று கூறுவார்கள். அதுகுறித்தெல்லாம் பெரிதாக ரியாக்ட் செய்யாத அவர் சமீபத்தில் ஒரு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் ஆம் எனக்கு தலைக்கனம் இருக்கிறதுதான். எனக்கு இல்லாமல் வேறு யாருக்கு இருக்கும் என்று கெத்தாக கூறினார். இதற்கிடையே ஒரு சிம்பொனியையும் எழுதி முடித்திருந்தார்.
லண்டனில் அரங்கேற்றம்: அந்த சிம்பொனியை சமீபத்தில்தான் லண்டனில் இருக்கும் அப்போலோ அரங்கத்தில் அரங்கேற்றி முடித்தார். மிகச்சிறப்பாக அமைந்திருந்த அந்த சிம்பொனிக்கு அரங்கத்தில் இருந்தவர்கள் அப்ளாஸை கொடுத்திருந்தார்கள். உலகளவில் சிம்பொனி அரங்கேற்றிய ஒரு இந்தியர் என்றால் அது இளையராஜாதான் என்பது பெருமைக்குரிய விஷயம். மேலும் அந்த சிம்பொனியை உலகம் முழுவதும் பல நாடுகளில் இசைக்கவிருக்கிறார். தமிழ்நாட்டிலும் அது நடைபெறவிருக்கிறது.
தமிழ்நாடு அரசு நடத்தும் பாராட்டு விழா: இந்நிலையில் இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் தெரிவித்தார். அதாவது இளையராஜாவின் பிறந்தநாளான ஜூன் இரண்டாம் தேதி அந்த விழா நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இளையராஜாவின் உண்மையான பிறந்தநாள் ஜூன் 3ஆம் தேதிதான். ஆனால் அன்றைய தினம் மறைந்த முதலமைச்சரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு மரியாதை கொடுக்கும் விதமாக தனது பிறந்தநாளை ஒரு நாள் முன்னரே இளையராஜா கொண்டாடுகிறார் என்பதும்; அவருக்கு இசைஞானி என்ற பட்டம் கொடுத்தது கருணாநிதிதான் என்பதும் நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











