நயன்தாரா இல்லைனா காங்... யோகிபாபுவின் புது பிரண்டு யார்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!
கொரில்லா படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட சிம்பான்சி குரங்கு, காமெடி நடிகர் யோகிபாபுவுடன் நெருக்கமாக பழகியது.
சென்னை: ஜீவா நடித்துள்ள கொரில்லா படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட சிம்பான்சி குரங்கு, காமெடி நடிகர் யோகிபாபுவுடன் நெருக்கமாக பழகியதாக அப்படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம் 'கொரில்லா'. இதில் ஜீவா, ஷாலினி பாண்டே, சதீஷ், விவேக் பிரசன்னா, யோகி பாபு, ராதாரவி, மொட்டை ராஜேந்திரன், சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை டான் சாண்டி.இயக்கியுள்ளார். படத்தை பற்றி பேசிய அவர், தாய்லாந்தில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது, யோகி பாபுவுடன் சிம்பான்சி குரங்கு நெருங்கி பழகியதாக தெரிவித்தார்.

திருட்டு கும்பல் கதை:
மேலும், இது பற்றி அவர் கூறியதாவது, "இது ஒரு திருட்டு கும்பலை வைத்து காமெடியாக எடுக்கப்பட்ட படம். தமிழ் ரசிகர்களுக்கு இது ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.

கூட்டணி:
ஜீவா, சதீஷ், விவேக் பிரசன்னா இவர்கள் மூன்று பேரும் நண்பர்கள். இவர்களுக்கு பணத் தேவை ஏற்படுகிறது. அதற்காக வங்கி ஒன்றை கொள்ளையடிக்க திட்டமிடுகிறார்கள். அவர்கள் தங்களுடன் ஒரு சிம்பன்ஸி குரங்கையும் இணைத்துக் கொள்கிறார்கள். இந்தக் கூட்டணி வங்கியை கொள்ளையடித்ததா? அல்லது போலீஸிடம் சிக்கியதா? என்பதே படத்தின் கதை.

சிம்பன்ஸி:
இந்த கதையில் முதலில் சிம்பன்ஸி குரங்கு இல்லை. முழு திரைக்கதையையும் எழுதி முடித்துவிட்டு ஒரு நாள் யதேச்சையாக ஹேங் ஓவர் - 2 படத்தின் போஸ்டரைப் பார்த்தேன். அதில் மூன்று நண்பர்களும், ஒரு சிம்பன்ஸியும் ஜாலியாக இருப்பது போல் போஸ் கொடுத்திருப்பதைப் பார்த்தேன். உடனே நம்முடைய திரைக்கதையிலும் ஒரு குரங்கை கொண்டு வரலாமே? என எண்ணி, திரைக்கதையை சற்று மாற்றியமைத்தேன். இதனை தயாரிப்பாளரிடம் சொன்னவுடன் அவரும் ஒப்புக்கொண்டார்.

கொரில்லா:
மறைந்திருந்து எதிர்பாராமல் தாக்குவதற்கு தான் ‘கொரில்லா தாக்குதல்' என்பார்கள். அதே போன்ற ஒரு தாக்குதல் இந்த கதையிலும் இடம்பெற்றிருக்கிறது. அதனால் இந்த படத்திற்கு ‘கொரில்லா' என்று பெயரிட்டோம். மற்றப்படி கொரில்லாவிற்கும் சிம்பன்ஸி குரங்குக்கும் எந்த தொடர்பும் இல்லை.
இந்தக் கதை சென்னையில் நடைபெறுகிறது. ஆனாலும் சிம்பன்ஸி தொடர்பான காட்சிகளை மட்டும் தாய்லாந்திற்கு சென்று படமாக்கிவிட்டு திரும்பினோம். இந்த ‘காங்'என்ற சிம்பன்ஸி குரங்கு ஏற்கனவே ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்திருக்கிறது. அதனால் அதனுடன் பணியாற்றுவது எளிதாக இருந்தது. ஜீவா விட யோகி பாபுவிடம் அந்த காங் விரைவில் ஒட்டிக்கொண்டது. படத்தில் இவர்கள் தோன்றும் காட்சிகளில் சிரிப்பிற்கு உத்தரவாதம் தரலாம்", இவ்வாறு அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications











