ஸ்டூடியோவில் வைத்து பாலியல் வன்கொடுமை முயற்சி.. அந்தரங்க ஃபோட்டோவும் அனுப்பினார்.. போட்டுடைத்த சின்மயி
சென்னை: தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான ஹிட் பாடல்களை பாடியிருப்பவர் சின்மயி. தனித்துவமான குரலுக்கு சொந்தக்காரரான அவர் சில வருடங்களுக்கு பிரபல பாடலாசிரியர் வைரமுத்து பற்றி புகார் ஒன்றை கொடுத்து பரபரப்பை கிளப்பியவர். அப்போதிருந்து திரைத்துறையில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து பல அதிரடி கருத்துக்களை கூறிவரும் அவர்; தற்போது போட்டிருக்கும் ட்வீட் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கன்னத்தில் முத்தமிட்டால் இடம்பெற்ற 'ஒரு தெய்வம் தந்த பூவே' பாடலை பாடி திரைத்துறையில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் சின்மயி. அந்தப் பாடலை மிக மிக சிறப்பாக பாடி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்த அவர்; முதல் பாடலிலேயே தமிழ்நாடு அரசின் விருதையும் பெற்றார். அந்தப் பாடலுக்கு பிறகு ஏகப்பட்ட பாடல்களை தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பாடி பிரபலமடைந்தார். பின்னணி பாடகியாக மட்டுமின்றி டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் ஜொலித்துக்கொண்டிருக்கிறார்.
வைரமுத்து மீது புகார்: சூழல் இப்படி இருக்க சில வருடங்களுக்கு முன்பு மீ டூ புகார் ஒன்றை முன்வைத்தார் சின்மயி. அதாவது பிரபல பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார் என்று கூற; ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் பரபரப்பில் பற்றிக்கொண்டது. இன்றுவரை அந்த விஷயத்தில் என்ன உண்மை என்று பலருக்கும் தெரியவில்லை. அவர் மீது ஒருதரப்பினர் விமர்சனத்தையும் வைத்து வருகிறார்கள். ஆனாலும் சின்மயி தொடர்ந்து பாலியல் தொல்லையால் திரைத்துறையில் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக தனது குரலை எழுப்பிவருவது குறிப்பிடத்தக்கது.

சின்மயி ட்வீட்: இந்நிலையில் சின்மயில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், "காஸ்டிங் கவுச் என்பது சினிமா துறையில் பரவலாக இருக்கிறது. 'முழு கமிட்மெண்ட்' (full commitment) கொடுக்கவில்லை என்றால் பெண்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. ஆனால் சினிமா துறையில் அந்த 'கமிட்மெண்ட்' என்ற சொல்லுக்கு முற்றிலும் வேறொரு அர்த்தம் உள்ளது.
அது தவறு: நல்ல ஆங்கில கல்வி பெற்ற பின்னணியில் இருந்து வந்தவர்கள் 'கமிட்மெண்ட்' என்றால் தொழில்முறை அர்ப்பணிப்பு, வேலைக்கு நேரத்தில் வருவது, நேர்மையாக இருப்பது என்று நினைத்தால் அது தவறு. ஆண்கள் அதிகாரப் பதவிகளில் இருந்துகொண்டு, பெண்கள் தங்களுக்கு உரிமைப்பட்டவர்கள் என நினைக்கிறார்கள். அதனால் அவர்கள் பெண்களிடமிருந்து பாலியல் சலுகைகளை கோரவும், எதிர்பார்க்கவும் தயங்குவதில்லை.
பெண் கலைஞருக்கு நடந்தது: ஒரு பெண் இசைக்கலைஞரை ஒருவர் ஸ்டூடியோவில் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார் என்பது எனக்குத் தெரியும். அந்தப் பெண், சவுண்ட் பூத்துக்குள் தன்னை பூட்டிக்கொண்டார்; பின்னர் சீனியர் ஒருவர் வந்து அவரை காப்பாற்றினார். இப்படி மீண்டும் மீண்டும் குற்றம் செய்பவர்கள் இன்னமும் மேடைகளில் இடம் பெறத்தான் செய்கிறார்கள். ஒரு ஆண் பாடகர் பெண்களிடம் தவறாக நடந்து, அவர்களிடம் அந்தரங்க உறுப்பு புகைப்படங்களை அனுப்பி, எந்தத் தூண்டுதலும் இல்லாமல் ப்ளோஜாப்பையும் கேட்டிருக்கிறார்.
பெண்கள்மீது நடைபெறும் பாலியல் தொல்லையும், வன்முறையும் மிகப்பெரிய அளவில் பரவி உள்ளது. அந்த தலைமுறையில் ஆண்-பெண் கலைஞர்கள் நண்பர்களாக, குடும்ப நண்பர்களாக இருந்தார்கள். ஒருவரையொருவர் மதித்து, பெரிய பெரிய கலைஞர்களுடன் பணியாற்றி, அவர்களும் லெஜண்ட்களாக மாறினார்கள். MeToo இயக்கம் என்பது அந்த தலைமுறைக்கு புரியாத ஒன்றாகவே இருந்தது.
சௌகார் ஜானகி போன்றவர்கள் கூட தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை வெளிப்படுத்திய பெண்களை அவமதித்தார்கள்.
Y.G. மகேந்திரனுடனான ஒரு பேட்டியில், தன்னை 'பெண்ணியவாதி' (feminist) என்று சொல்லிக்கொண்ட சௌகார் ஜானகி, அதே நேரத்தில் பாலியல் தொல்லையைப் பற்றி பேசும் பெண்களை - "இது அவர்களின் கணவர்கள், குடும்பங்களுக்கு அவமானம்" என்று சொல்லியிருந்தார். இப்போது பெண்கள் வெளிநாடுகளிலிருந்தும், உயர்கல்வியுடனும் சினிமா துறைக்கு வருகிறார்கள். இங்கு என்ன நடக்கிறது என்பதையும் அவர்கள் தெளிவாக புரிந்துகொள்கிறார்கள்.
உண்மையான பிரச்னை: நான் வைரமுத்துவால் பாலியல் தொல்லைக்கு உள்ளானேன். அப்போது இளமையிலிருந்தே வெளியே வராத வயதில் இருந்தேன். அவரை ஒரு வழிகாட்டி, ஒரு லெஜண்டரி பாடலாசிரியர் என்று மதித்தேன். அவர் இப்படி இருப்பார் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. என் அம்மா அங்கேயே, அதே இடத்தில்தான் இருந்தார் - அப்படியும் அவர் என்னை தொந்தரவு செய்தார். பெற்றோர் அருகில் இருந்தாலும் இப்படிப்பட்ட ஆண்கள் மாறுவதில்லை. பெண்களுக்கு வேலை கொடுத்துவிட்டோம். எனவே அவர்களிடம் தங்களுக்கு பாலியல் ரீதியாக உரிமை உண்டு என்று ஆண்கள் நம்புவதுதான் உண்மையான பிரச்னை" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











