வைரமுத்துவை பூரிப்படையச் செய்த மகன்! உலக அளவில் ட்ரெண்டிங்கில் இருக்கும் கபிலன் வைரமுத்து பாடல்கள்!
சென்னை: உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் 12ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள இந்தியன் 2 படமும் தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தி கோட் படமும் இணையத்தில் குறிப்பிட்டவகையிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவை என்னவென இந்த தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம். இதில் இந்தியன் படத்தில் கமல்ஹாசன் பல்வேறு கெட்டப்புகளில் நடித்துள்ளார். தி கோட் படத்தில் அதாவது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகின்றது.
தமிழ் சினிமாவில் தற்போது மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள படங்கள் என்றால் அது ஸ்டார் ஹீரோக்கள் நடிப்பில் உருவாகி வரும் படங்கள்தான். குறிப்பாக விஜய்யின் தி கோட், அஜித்தின் விடாமுயற்சி, குட் பேட் அக்லி, ரஜினியின் வேட்டையன், கமல்ஹாசனின் இந்தியன் 2, சூர்யாவின் கங்குவா மற்றும் விக்ரமின் தங்கலான் தனுஷின் 50வது படமான ராயன் ஆகிய படங்களைக் கூறலாம். இதில் இந்த மாதம் ரிலீஸ் ஆகின்ற படங்கள் என்றால் அது இந்தியன் 2 படமும் ராயன் படமும் தான். இந்தியன் 2 படம் வரும் 12ஆம் தேதியும் ராயன் படம் 26ஆம் தேதியும் ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்தியன் 2 படம் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் நீட்சியாக எடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டும் இல்லாமல் இந்த படத்தின் ட்ரைலரைப் பார்க்கும்போது படத்தில் கமல்ஹாசன் பல்வேறு கெட்டப்புகளில் நடித்துள்ளார் என்பது தெரிகின்றது. இதுவே படத்தின் மீதான ஆர்வத்தைக் கூட்டியுள்ளது. மேலும் படத்தில் நடிப்பு அரக்கன் எனப்படும் எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர்களுடன் ப்ரியா பவானி ஷங்கர், சித்தார்த், ஜெகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இவர்கள் மட்டும் இல்லாமல் மறைந்த நடிகர்களான விவேக், நெடுமுடி வேணு மற்றும் மனோபாலா ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

தி கோட்: அதேபோல் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தினைப் பொறுத்தவரையில் படத்தில் விஜய் கதாநாயகனாக நடித்தாலும் அவருடன் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் நடித்துள்ளதைப்போல் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காட்சி அமைக்கப்பட்டுள்ளது என ஏற்கனவே படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்து வருகின்றார். படத்தின் முதல் பாடல் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், படத்தின் இரண்டாவது பாடலான சின்ன சின்ன கண்கள் பாடல் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடலை விஜய் பாடியுள்ளார். மறைந்த பாடகி பவதாரிணி பாடியதைப் போல் ஏ.ஐ தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி சேர்க்கப்பட்டுள்ளது.

ட்ரெண்டிங்: இந்நிலையில் தி கோட் படத்தின் சின்ன சின்ன கண்கள் பாடலும் இந்தியன் 2 படத்தின் காலண்டர் பாடலும் யூட்டூப் ட்ரெண்டிங்கில் முதல் இரண்டு இடங்களில் உள்ளது. இதில் சின்ன சின்ன கண்கள் பாடலை இதுவரை யூட்டூப்பில் மட்டும் 9.8 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். அதேபோல் காலண்டர் பாடலை கடந்த மூன்று தினங்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இந்த தகவல் தற்போது விஜய் மற்றும் கமல் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகின்றது. இந்த இரண்டு பாடல்களையும் கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார்.



Click it and Unblock the Notifications











